விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா.. இன்று பதவியேற்றார்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்

Meenakshi
Jul 16, 2024,11:56 AM IST

சென்னை:   விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுகைச் சேர்ந்த அன்னியூர் சிவா இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.


சட்டசபையில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில், சபாநாயகர் அப்பாவு உறுப்பினர் சிவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்  துரைமுருகன், பொன்முடி, கே. என். நேரு, உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அத்தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.


இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக, தேமுதிக ஆகியவை தேர்தலை புறக்கணித்து விட்டன.


கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணும் பணி கடந்த 13ம் தேதி நடந்தது. தபால் வாக்குப்பதிவு தொடங்கி 20 சுற்றுக்கள் வரை தொடர்ந்து திமுக  வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தபடியே இருந்தார். இறுதியில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிவா பெற்றார். 2வது இடத்தை பாமகவும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சியும் பெற்றன.