அன்னபூரணி சர்ச்சை.. "உள்நோக்கம் எதுவும் இல்லை.. வருத்தம் தெரிவிக்கிறேன்".. நயன்தாரா

Su.tha Arivalagan
Jan 19, 2024,07:06 PM IST

சென்னை: அன்னபூரணி படம் தொடர்பான சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெய்ஸ்ரீராம் என்று ஆரம்பித்து எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையில், உள்நோக்கத்துடன் காட்சிகள் வைக்கப்படவில்லை என்றும், எதிர்பாராத இந்த சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.


நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அன்னபூரணி. சத்யராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் இடம் பெற்ற சில வசனங்கள் தொடர்பாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி தளத்திலிருந்து படத்தை நீக்கி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


தணிக்கை செய்யப்பட்டு வெளியான ஒரு படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன்னிச்சையாக தனது தளத்திலிருந்து நீக்கிய செயல் திரையுலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இ்நத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம் என்று ஆரம்பித்து அந்த அறிக்கையில் நயன்தாரா கூறியுள்ளதாவது:




எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசி பொருளாக இருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கை வெளியிடுகிறேன்.


அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.


தணிக்கை குழுவால் சான்று அளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்று எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துணியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.


அதையும் இனி உங்கள் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.


எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும் மற்றவரிடம் இருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வது மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று நயன்தாரா கூறியுள்ளார்.