கோர்ட்டுகளில் அம்பேத்கர் படங்களை நீக்குவது முறையாகாது.. அண்ணாமலை

Su.tha Arivalagan
Jul 24, 2023,09:43 AM IST
சென்னை: நீதிமன்றங்களில்  திருவள்ளுவர், மகாத்மா காந்தி படங்களைத் தவிர வேறு தலைவர்களின் படங்கள் இருக்க்க கூடாது என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 



அதன்படி, நீதிமன்றங்களில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைகளையும்,  உருவப் படங்களையும் நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் சென்னை ஆலந்தூர் புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் படத்தை நீக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிய வருகிறது. 

நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தான் நீதிமன்றங்களின் முக்கியக் கடமை. அப்படிப்பட்ட நீதிமன்றங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ இடம்பெறுவது அவருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

எனவே, நீதிமன்ற வளாகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலைகளும் உருவப்படங்களும் நிச்சயமாக இடம்பெற வேண்டும். உயர் நீதிமன்றம் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், அண்ணல் அம்பேத்கருக்கு நிச்சயம் விதிவிலக்கு வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களிடம், தமிழ்நாடு பாஜக  சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.