2 வது ஆடியோவையும் வெளியிட்ட அண்ணாமலை.. என்ன செய்யப் போகிறது திமுக?

Aadmika
Apr 26, 2023,11:59 AM IST
சென்னை : தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினர் குறித்துப் பேசியதாக கூறப்படும் இரண்டாவது ஆடியோவையும் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 14 ம் தேதி திமுக.,வின் ஊழல்களுக்கான ஆதாரங்களை வெளியிட போவதாக அண்ணாமலை முன்பே அறிவித்திருந்தார். சொன்னபடியே ஏப்ரல் 14 ம் தேதி DMK Files என்ற பெயரில் திமுக தலைவர்களின் ரூ.1.34 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் குறித்த விபரத்தை வெளியிட்டார். இதில் முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, செந்தில் பாலாஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் சொத்து விபரங்களும் இருந்தது.

2011 ம் ஆண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பெட்டிகளை சப்ளை செய்வதற்காக தனியார் கம்பெனி ஒன்றிற்கு ஆதரவாக ஒப்பந்தம் போடுவதற்கு மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு, சட்ட நடவடிக்கையிலும் இறங்கியது. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.500 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டனர்.



ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்த அண்ணாமலை, தான் எந்த சட்டத்தையும் மாறவில்லை என்றும் சொன்னதுடன், யாரும் எதிர்பாராத வகையில்,நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக.,வின் ஊழல்கள் பற்றி பேசியதாக கூறி ஒரு  ஆடியோ கிளிப்பிங்கை வெளியிட்டார். 

அதில், முதல்வரின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் ரூ.30,000 கோடி கட்சி பணத்தை கையாடல் செய்ததாகவும், கட்சியை அவர்கள் நாசப்படுத்தி, தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. வேண்டுமானால் இந்த ஆடியோவை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளட்டும் என அண்ணாமலை பகிரங்கமாக சவால் விட்டார்.

ஆனால் இந்த ஆடியோ போலி என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. திமுக தரப்பிலும் சிலர் இந்த ஆடியோ போலியானது என்று கூறியிருந்தனர். ஆனால் திமுக தலைமை ஆணித்தரமாக இதை மறுக்கவில்லை. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் திமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் அதிரடி விளக்கத்தை திமுக வெளியிடும். இம்முறை பாரதி எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் நேற்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி பற்றியும் சபரீசன் பற்றியும் செய்துள்ள "ஊழல்கள்" குறித்து பேசியதாக கூறி மற்றொரு ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். இது திமுக.,வில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து திமுகவை ஆடியோ மூலம் அட்டாக் செய்ய ஆரம்பித்துள்ள அண்ணாமலைக்கு கடிவாளம் போட திமுக என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணாமலைக்கு சரியான பதிலடியை திமுக கொடுத்தால்தான் அதன் பக்கம் உண்மை உள்ளது என்று அர்த்தம். மாறாக அமைதி காத்தால் அண்ணாமலை பக்கம்தான் உண்மை உள்ளதாக மக்கள் கருத ஆரம்பித்து விடுவார்கள். அதேசமயம், பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் மீதும் திமுக நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி செய்தால் அந்த ஆடியோ உண்மை என்பதை திமுகவே ஒப்புக் கொண்டது போலாகி விடும்.. இடியாப்பச் சிக்கல்தான். எப்படி சமாளிக்கப் போகிறார் ஸ்டாலின் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.