"அண்ணாமலை பேச்சு".. பாஜகவை உதறுமா அதிமுக.. கொந்தளிக்கும் கட்சியினர்!

Su.tha Arivalagan
Sep 18, 2023,02:28 PM IST

சென்னை: அண்ணாமலையின் அதிரடி பேச்சு மற்றும் மிரட்டல் தொனி ஆகியவற்றால் அதிமுகவினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். உடனடியாக பாஜகவை கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


அதிமுக - பாஜக இடையே மேலிட அளவில் நல்ல உறவு இருந்தாலும் கூட, மாநிலஅளவில் கடும் மோதல் முட்டல் தான் இருந்து வருகிறது. குறிப்பாக அண்ணாமலை தலைவரான பிறகுதான் இந்த பிரச்சினை வெடித்து விஸ்வரூபம் எடுத்தது. இரு தரப்பும் கொஞ்சம்  கூட சுமூகமாகவே இல்லை.




அண்ணாமலை ஏதாவது சொல்வார்.. அதற்கு அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் காட்டமாக பதிலளிப்பார்கள். அதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுப்பார்கள். இரு தரப்பும் இப்படித்தான் கடந்த சில மாதங்களாக பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளன.


சமீபத்தில்தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. வழக்கமாக தலைவர்கள் புடை சூழ செல்லும் அவர் இந்த முறை தனியாக அமித்ஷாவைச் சந்தித்தார். கூட்டணி குறித்தும், நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்தும் அவர் அமித் ஷாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.


அவர் போய் விட்டுத் திரும்பியதுமே தமிழ்நாட்டில் மோதல் வெடித்து விட்டது. பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்களால் அதிமுகவினர் கோபமடைந்தனர். அண்ணாவைப் பற்றி அண்ணாமலைக்குப் பேசவே தகுதியில்லை என்று ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சிவி சண்முகம் ஆகியோர் காட்டமாக விமர்சித்தனர். செல்லூர் ராஜு நாக்கு துண்டாகிப் போகும் என்று மிரட்டினார். சிவி சண்முகமோ, கடும் ஆவேசமாக வசூலுக்காக பாதயாத்திரை நடத்தும் அண்ணாமலை என்று விளாசித் தள்ளி விட்டார்.



இதற்கெல்லாம் நேற்று அண்ணாமலை அதிரடியான பதிலடி கொடுத்தார். துப்பாக்கி பிடித்த கை இது.. இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என் கிட்ட வேண்டாம்.. தன்மானத்திற்கு இழுக்கு வந்தால் யாராக இருந்தாலும் விட மாட்டேன்.. அடிமைகளாக இருக்க என்னால் முடியாது.. எனது கருத்தில் மாற்றம் இல்லை. இப்படித்தான் பேசுவேன் என்று நேரடியாகவே அதிமுகவினரை விளாசி விட்டார். அத்தோடு சிவி சண்முகத்தையும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்.


இந்த பேச்சு இப்போது அதிமுக  த ரப்பில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது. உடனடியாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த தலைவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தொண்டர்களும், அதிமுக ஐடி விங் அணியினரும் கூட எடப்பாடிக்கு கோரிக்கை வைத்து சமூக வலைதளங்களில் ஆவேசம் காட்டி வருகின்றனர்.




ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை பதிலே தராமல் இருக்கிறார். அவரால் பாஜகவை உதற முடியுமா என்று தெரியவில்லை.. அந்த அளவுக்கு அவருக்குத் தைரியம் இருக்கிறதா என்பதும் சந்தேகமே. பாஜக வேண்டாம் என்று பகிரங்கமாக அவரால் கூற முடியுமா என்றும் தெரியவில்லை. அப்படி கூறினால் அடுத்து என்னெல்லாம் நடக்கும் என்பது எடப்பாடி மட்டுமல்ல.. கட்சியினருக்குமே கூட நன்றாக தெரியும் என்பதால்.. இந்த விவகாரத்தில் அதிமுக எப்படி செயல்படப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.