80% "அவங்க"தான் ஜெயிப்பாங்க.. என்ன அண்ணாமலையே இப்படி சொல்லிட்டாரு!

Su.tha Arivalagan
Jan 25, 2023,09:23 AM IST
திருநெல்வேலி: இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த இடைத் தேர்தல்களில் 80 சதவீதம் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகிறார். கட்சியினர் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர்.

அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்பதில் இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. கடந்த முறை போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இந்த முறை சீட்டை அதிமுகவிடமே கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அதிமுக போட்டியிடுவதிலும் சிக்கல் நிலவுகிறது. எடப்பாடி தரப்பு  வேட்பாளரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம் என ஓபிஎஸ் தரப்பு பிடிவாதமாக உள்ளது. பாஜகவுக்கும் முதலில் போட்டியிட ஆர்வம் இருந்தது. ஆனால் அதிமுக இருக்கும் இருப்பைப் பார்த்தால், டெபாசிட் கூட மிஞ்சுமா என்ற கவலையில் பாஜகவினர் உள்ளனர். இதனால் பாஜக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் திருநெல்வேலிக்கு வந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஈரோடு கிழக்கு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவசரப்படாதீர்கள் இன்னும் நாட்கள் உள்ளன. ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நல்ல முடிவு எடுப்போம்.

இப்போது அங்கு யார் ஜெயிப்பார் என்ற பலப்பரீட்சைக்கு அவசியம் இல்லை, தேவையும் இல்லை. யாரிடமும் எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல வேட்பாளர், பலம் வாய்ந்த வேட்பாளர்தான் இப்போது தேவை. எந்தக் கட்சி போட்டியிடுகிறது என்பதெல்லாம் முக்கியமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் 80 சதவீதம் ஆளுங்கட்சிகள்தான் வென்றுள்ளன. காரணம் பண பலம் படை பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி வென்று விடுகிறார்கள். இதுதான் உண்மையான நிலவரம். ஆனால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிகள் தோல்வியைத்தான் தழுவும். இதுவும் உண்மை. எனவே பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அண்ணாமலை.

அண்ணாமலையே, 80 சதவீதம் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்று கூறியிருப்பது பாஜகவினரை சோர்வடைய வைத்துள்ளது.