டாக்டர் தமிழிசையை வீடு தேடி போய் சந்தித்த அண்ணாமலை.. பெருமகிழ்ச்சி என்று பேட்டி!

Su.tha Arivalagan
Jun 14, 2024,06:49 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இடையை கடும் மோதல் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தமிழிசையை அவரது வீட்டுக்குப் போய் சந்தித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு தென் சென்னை தொகுதியில் களம் கண்டார்.


இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்தபோது பாஜக - அதிமுக இணைந்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கும். அண்ணாமலையால்தான் கூட்டணி அமையாமல் போய் விட்டதாக தெரிவித்திருந்தனர்.




டாக்டர் தமிழிசையும் இதுதொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஒரு பேட்டியில், தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைப்பது என்பது ஒரு யுக்தி. அந்த யுக்தியை நாங்களும் வகுத்தோம். ஆனால் அண்ணாமலைக்கு அது பிடிக்கவில்லை. அத்தோடு விட்டு விட்டோம் என்று கூறியிருந்தார். இன்னொரு பேட்டியில் கட்சியில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டனர். கட்சியில் யார் சேர வந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தகுதி இருக்க வேண்டும். நான் தலைவராக இருந்தபோது அதைக் கடைப்பிடித்தேன் என்று கூறியிருந்தார்.


இன்னொரு பேட்டியில் பாஜக மற்றும் திமுக ஐடி விங்குகளை கடுமையாக அவர் சாடியிருந்தார். என்னை பரட்டை என்று சொல்லி விமர்சிக்கிறார்கள். நான் பரட்டைதான். ஆனால் ஒரிஜினல் என்று கூறி அதிரடி காட்டினார். இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த டாக்டர் தமிழிசையிடம், மேடையில் வைத்தே உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. ஆனால் இதுகுறித்து விளக்கம் தெரிவித்த தமிழிசை, தேர்தல் பணிகள் குறித்தே தன்னிடம் அமித் ஷா பேசியதாக விளக்கியிருந்தார்.


இந்த நிலையில் இன்று அண்ணாமலையும், தமிழிசையும் சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழிசை வீட்டுக்கே அண்ணாமலை போய் சந்தித்துள்ளார். இதுகுறித்து இருவரும் முகம் நிறைய சிரிப்புடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அண்ணாமலை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரான, பாஜக தமிழ்நாடு  மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி  டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்  அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. 


தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி 

தமிழிசை செளந்தரராஜன், அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.


கட்சி மேலிட கட்டளைப்படி இந்த சந்திப்பு நடந்ததா அல்லது இருவரும் பரஸ்பரம் சந்தித்து கசப்புகளை மறந்து மீண்டும் கை கோர்த்து செயல்படுவது என முடிவு செய்தார்களா என்று தெரியவில்லை.

தம்பியை சந்தித்ததில் மகிழ்ச்சி -  தமிழிசை


இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை போட்ட போஸ்ட்டை ரீபோஸ்ட் செய்து டாக்டர் தமிழிசையும் பதிலளித்துள்ளார். அதில், தமிழக பாஜக தலைவர் அன்புத் தம்பி அண்ணாமலையை  சந்தித்ததில் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவின் மூலமாக இரு தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்படப் போவதாக மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.