அழகாக முறுக்குப் பிழிந்த அண்ணாமலை..  மோடிக்கு தரச் சொன்ன கடைக்காரர்.. மணப்பாறையில் கலகல!

Meenakshi
Nov 06, 2023,06:34 PM IST

மணப்பாறை: மணப்பாறையில் நடை பயணம் மேற்கொண்ட போது முறுக்குக் கடை ஒன்றில் புகுந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முறுக்கு சுட்டார்.


அவர் சுட்ட முறுக்கை சுவைத்துப் பார்த்த கடைக்காரர், உற்சாகமாகி, பிரதமருக்கும்  வழங்குமாறு முறுக்கு பார்சல் ஒன்றையும் கொடுத்தார். இந்த சம்பவத்தினால் அந்த இடமே கலகலப்பானது. 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மணப்பாறையில் நேற்று என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டார். யாத்திரையின் போது அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சாதாரண மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடைசெய்தார். ஜல்லிக்கட்டுக்கு தடைவிலக காரணம் மோடி மட்டும்தான். 




காங்கிரஸ், திமுக உள்ளிட்ட குடும்ப கட்சியினர் மோடியை எதிர்த்து கூட்டணி அமைத்துள்ளனர். மது அருந்துபவர்களால் வீட்டுக்கு செல்ல வேண்டிய சம்பளப் பணம், திமுகவினரின் சாராய ஆலைக்கு செல்கிறது. இதனால் தான் குடியை நாங்கள் எதிர்க்கிறோம். குடிநோய் மையங்களில் அமைச்சர்களே அட்மிட் ஆகும் நிலையில் தமிழகத்தின் குடி கலாச்சாரம் இருக்கிறது. 


காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி 93 முறை பல ஆட்சிகளை டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால், மோடி எந்த ஆட்சியையும் கலைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கி உள்ளது.


டிஎன்பிஎஸ்சியில் ஊழல் நடப்பதால் வேலை தரவில்லை. 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிய பிரதமர் மோடி, இதுவரை 8.50 லட்சம் பேருக்கு வேலை அளித்துள்ளார். பாஜகவினரை கைது செய்வதுதான் தமிழக காவல் துறையின் முக்கியமான வேலை. தமிழகத்தில் காவல் துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என்றார் அண்ணாமலை.