"அடிமைகள்.. துப்பாக்கி பிடிச்ச கை"... சீறிய அண்ணாமலை.. அதிர்ச்சியில் அதிமுக!

Su.tha Arivalagan
Sep 17, 2023,03:55 PM IST

சென்னை:  கூட்டணியில் இருப்பதற்காக நான் அடிமையாக முடியாது.. இது துப்பாக்கி பிடிச்ச கை.. நல்ல போலீஸ்காரனைப் பார்த்தா திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரிதான் இருக்கும்.. 6 மணிக்கு மேல சிவி சண்முகம் எப்படி பேசுவார்னு எனக்குத் தெரியும்.. பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வீசிய அம்புகள் இவை!


அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது என்று பலரும் சொல்வார்கள். காரணம், இருவருக்கும் இடையே இருக்கும் சில பொதுவான காரணங்கள். ஆனால் அந்த கூட்டணி தற்போது மனப்பூர்வமாக இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்.




அதிமுக தலைமைக்கும், தமிழ்நாடு பாஜக தலைமைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நீரு பூத்த நெருப்பாக இது தகித்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே தயாராக இருக்கிறார்கள். இருவரும் மனம் ஒத்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் 1 சதவீதம் கூட இல்லை.. இதுவே நிதர்சனம்.


இதைத்தான் எடப்பாடி  பழனிச்சாமி அதிமுக தலைமையை கையில் எடுத்த பிறகு, அண்ணாமலை தலைவரான பிறகு அனைவரும் பார்த்து வருகிறார்கள்.  எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஆரம்பத்தில் பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் ஓ. பன்னீர் செல்வத்தைத் தாண்டி ஒற்றைத் தலைமையாக வர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தபோது அவருக்கு ஆதரவாக அண்ணாமலை நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினார். இதுதான் அவருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே உரசல் ஏற்பட முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.


இதுதான் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து இப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இரு தரப்பும் வாயை விடும் அளவுக்கு போய் விட்டது. டெல்லியில் இரு கட்சித் தலைவர்களும் பேசி ஏதாவது முடித்து விட்டு வருவார்கள்.. அடுத்த நாளே ஏதாவது புதுப் பஞ்சாயத்து வந்து விடும். இப்படித்தான் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசப் போக கொந்தளித்தது அதிமுக. பதிலுக்கு பாஜக தலைவர்களும் வாயை விட்டனர். இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இப்போது பேரறிஞர் அண்ணாவை வைத்து புதுப் பஞ்சாயத்து. அண்ணா குறித்து அண்ணாமலை சொன்ன கருத்துகளுக்கு ஜெயக்குமார் முதலில் கடுமையாக கண்டித்தார். பின்னர் செல்லூர் ராஜூ நாக்கை வெட்டுவோம் என்றார். சி.வி. சண்முகம் கடுமையாக கண்டித்தார், அண்ணாமலையை எச்சரித்தார்.

இதற்கு இன்று அண்ணாமலை கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். 

நல்ல போலீஸ்காரனைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டத்தான் செய்யும். நான் எனது கருத்தை மாற்றிச் சொல்லவில்லை, வரலாற்றில் என்ன இருக்கிறதோ அதைத்தான் சொன்னேன். அதை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.  எனது கருத்தை கருத்தாக பார்க்க வேண்டும். கட்சியின் கொள்கையாக பார்க்கக் கூடாது. விமர்சித்தால் விமர்சிக்கட்டும்.

கூட்டணி என்பதற்க அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அடிமையாக இருக்க முடியாது.  கூட்டணி என்பதற்காக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அடிமை கிடையாது. அவர்களையும் அடிமையாக இருக்குமாறு நான் சொல்ல மாட்டேன்.

இந்த மிரட்டல் உருட்டல் வேலையெல்லாம் வேலைக்கு ஆகாது. நான் மரியாதை கொடுத்துப் பேசுவேன். அவர்களும் அதேபோல இருக்க வேண்டும். சிவி சண்முகம் பத்தி நான் கூட நிறைய சொல்லலாம். அவர் 6 மணிக்கு மேல ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்னாடி ஒரு மாதிரி பேசுவார். நானும் சொல்லலாம். ஆனால் சொல்ல மாட்டேன்.





அவர்கள் அமைச்சர்களாக இருந்ததே வசூல் செய்யத்தான். எனவேதான் எதையும் வசூல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது சிவி சண்முகம் என்னெல்லாம் செய்தார்னு எனக்குத் தெரியும்.  இது பத்து வருடம் துப்பாக்கி பிடித்த கைது. எனது நேர்மையை கொச்சைப்படுத்திப் பேசினால் யாராக இருந்தாலும் விட மாட்டேன். தன்மானத்தை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். சீனியர் ஜூனியர்லாம் பார்க்க மாட்டேன். 

கூட்டணி என்பதற்காக கூணிக் குறுகி ஒட்டி உறவாட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு ஒரு கொள்கை இருந்தால் எங்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. அடிமையாக இருக்க முடியாது. இருவருக்கும் ஒரே கருத்துதான் இருக்க வேண்டும் என்றால் இரு கட்சிகளையும் இணைச்சுட்டுப் போய்ரலாமே என்று அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.

அதிமுகவினரை மிகக் கடுமையாக அண்ணாமலை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு  அதிமுக என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.