அதிமுக மீது அதி வேகமாக பாய்ந்த அண்ணாமலை.. ஒய்.எம்.சி.ஏ மைதானமே ஆடிப் போச்சு.. என்ன தான் பிரச்சினை?

Su.tha Arivalagan
Aug 26, 2024,12:29 PM IST

சென்னை :   முன்பெல்லாம் அதிமுக.,வினர் பேசினால் திமுக.,பற்றியும், திமுக.,வினர் பேசினால் அதிமுக.,வை பற்றியும் தான் கடுமையாக விமர்சித்து பேசுவார்கள். ஒருவர் ஆட்சி காலத்தில் இருந்த குறைபாடுகள் பற்றியும், அதை தங்கள் ஆட்சி வந்ததும் சரி செய்தது பற்றியும் தான் அதிகமாக பேசி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சமீப காலமாக அதிமுக-திமுக விமர்சன மோதல்களை விட, அதிமுக-பாஜக விமர்சன மோதல்கள் தான் அதிகம் நடக்கிறது.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் என யார் பேசினாலும் பாஜக.,வை பற்றியும், அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பற்றியும் பேசாமல் இருப்பதே கிடையாது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூட எடப்பாடி பழனிச்சாமி, "அண்ணாமலை எப்படி மாநில தலைவர் ஆனார் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் கட்சிக்காக என்ன உழைத்துள்ளார்? ஆனால் அதிமுக.,வில் அப்படி கிடையாது. நாங்கள் அடிமட்ட தொண்டராக இருந்து, கட்சிக்காக பல காலமாக உழைத்து, பல கட்ட பதவிகளில் இருந்த பிறகு தான் எம்எல்ஏ., எம்.பி., போன்ற பதவிகளுக்கு வந்திருக்கிறோம். நாற்பது வருடங்கள் கட்சிக்காக கடுமையாக உழைத்த பிறகு தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது" என்றார்.




அது மட்டுமல்ல," தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? தமிழகத்தில் எத்தனை மழை, புயல் போன்றவை வந்தது. அதற்கெல்லாம் இவர் என்ன உதவி செய்துள்ளார்? மத்திய அரசிடம் பேசிய ஏதாவது நிதி பெற்று தந்துள்ளாரா? அண்ணாமலை, அவரது கட்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கும் எதுவும் செய்யவில்லை. இவருக்கு அதிமுக.,வை பற்றி விமர்சிக்க என்ன தகுதியும் கிடையாது" என சரமாரி கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


நேற்று (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு மிகக் கடுமையானதாக பார்க்கப்படுகிறது.  "திமுக-அதிமுக., வை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இது தான் சரியான நேரம் என கூறி உள்ளார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஆளும் கட்சியான திமுக.,வை விட எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக.,வையும், அதன் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை பற்றியும் தான் அதிகமாகவும், மிக கடுமையாகவும் விமர்சித்து பேசி உள்ளார் அண்ணாமலை.  எடப்பாடி பழனிச்சாமியை கொலை வழக்கில் சிக்கியவர் என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை.




மேலும் 2019 தேர்தலின்போது நரேந்திர மோடி மனு தாக்கலின்போது கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்ததாகவும், ஆனால் தோற்கப் போகிறவருக்காக எதுக்கு வரணும் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகவும், அன்று முதல் அவரை நான் புறக்கணிக்கத் தொடங்கியதாகவும் அண்ணாமலை நேற்றைய கூட்டத்தில் கூறினார். 2026 தேர்தலோடு அதிமுக இருக்காது என்றும் அவர் காட்டமாக பேசினார்.


அதிமுக-திமுக இடையே கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர்-கருணாநிதி-ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் மட்டத்தில் இருந்த ஆட்சியை கைப்பற்றுவது, ஆட்சிக்கு வந்ததும் வழக்கு தொடர்வது என பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் கூட்டணி கட்சிகளாக இருந்த இடையில் பிரிந்து, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு மீண்டும் பாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக-பாஜக.,இடையே அப்படி என்ன தான் பிரச்சனை? இவர்கள் இப்படி கடுமையாக விமர்சித்துக் கொள்ள என்ன காரணம்?  




மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய கருத்துக்கள் மட்டும் தான் இவர்களின் மோதலுக்கு காரணமா என்றால் கண்டிப்பாக கிடையாது. பாஜக.,வின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது, டில்லியில் எடுக்கும் முடிவு படி தான் அதிமுக செயல்படுகிறது என்பது போன்ற திமுக வைத்த விமர்சனங்களும் அதிமுக-பாஜக உறவில் இருக்கும் விரிசல் பெரிதாக மறைமுக காரணம் என்றே அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தாங்கள் பலம் வாய்ந்த கட்சி, பாஜக.,வை நம்பி அதிமுக கிடையாது என்பதை மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டே, இனி பாஜக.,வுடன் கூட்டணி கிடையாது என்ற முடிவுக்கு அதிமுக.,வை வரவைத்துள்ளது.


காரணமாக எதுவாக இருந்தாலும் பாஜக-அதிமுக கூட்டணி அமைவதற்கு தற்போதைய நிலவரப்படி வாய்ப்பே இல்லை என்பது கள நிலவரம். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி சேராமல் போனதால் தான் திமுக., இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றதாக தொண்டர்களிடம் மட்டுமல்ல அதிமுக, பாஜக கட்சி தலைவர்கள் பலருக்கும் கருத்து உள்ளது. இந்த தோல்வியை மனதில் வைத்தாவது சட்டசபை தேர்தலுக்குள் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வேண்டும் என இரு கட்சி தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதற்கு "வாய்ப்பே இல்லை ராஜா" என கட்சி தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். இதனால் சட்டசபை தேர்தல் எப்படி இருக்குமோ, விஜய் வந்து இவர்களுக்கு டஃப் கொடுப்பாரா என்பது போன்ற பல குழப்பங்கள் தமிழக அரசியலில் நிலவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்