பிரதமர் மோடி சொன்ன 400 பேரில்.. நம்ம தங்கர் பச்சான் அண்ணனும் ஒருவர்.. அண்ணாமலை பலே பிரச்சாரம்!

Meenakshi
Mar 30, 2024,06:32 PM IST

கடலூர்: பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில்  போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பிரதமர் சொன்ன 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.


தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19ம் தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும்,தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினர்களும் கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக முதுநகர் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். 




அப்போது அவர் பேசுகையில், தங்கர் பச்சானுக்கு  மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி கூறிய 400 எம்பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர். அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி,  எம். எல்.ஏ.க்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால், தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.


தங்கர் பச்சான் இயக்குனராக மட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.  திமுக ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிட தகுதி இல்லை என்று கூறி வாக்கு சேகரித்தார்.