கடைசி சீட்டில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு முக்கியத்துவம்.. திமுகவினர் சீண்டல்!

Su.tha Arivalagan
Apr 10, 2023,09:19 AM IST

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட சீட்டை வைத்து தற்போது திமுகவினர் சீண்டி வருகின்றனர்.


கர்நாடக சட்டசபைக்கு  மே 10ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி முக்கியக் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டன. அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வேலைகளை முடுக்கி விட்டு விட்டது. பாஜக தரப்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வரவில்லை.


இந்த நிலையில் கர்நாடக பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் பி.எஸ். பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


இந்தக் கூட்டம் தொடர்பான புகைப்படம்தான் தற்போது தமிழ்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. காரணம், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் முக்கியமான நபராக சேர்க்கப்பட்டுள்ளவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.  எனவே அண்ணாமலை ஆதரவாளர்கள் அவருக்கான முக்கியத்துவத்தைப் பார்த்தீங்களா என்று தமிழ்நாட்டில் "வைப்" செய்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அண்ணாமலைக்கு கட்சி மேலிடத்தில் செல்வாக்கு சரிந்து விட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முன்தினமும், நேற்றும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தார். சென்னையில் அவரது பயணம் பேசு பொருளாகியிருந்தது. ஆனால் அண்ணாமலை ஊரிலேயே இல்லை. அவர் டெல்லியில் இருப்பதாக கூறப்பட்டது. அதுவே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் நேற்று மாலை நடந்த பாஜக தேர்தல் கமிட்டி கூட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை கடைசி சீட்டில் அமர்ந்துள்ளார்.  அதில் இன்னொரு முக்கியமான விஷயம், வானதி சீனிவாசன் பிரதமருக்கு வலதுபுறம் உள்ள வரிசையில்  அமர்ந்துள்ளார். அதாவது உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ், எடியூரப்பா ஆகியோர் அமர்ந்துள்ள வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறார் வானதி சீனிவாசன்.  அவருக்கு அடுத்துதான் மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ் , கர்நாடக முதல்வர்  பொம்மை ஆகியோரெல்லாம் வருகிறார்கள். இதை வைத்து திமுகவினர் இப்போது சீண்டி வருகின்றனர்.


என்ன பாஜகவினரே.. உங்க தலைவர் அண்ணாமலைக்கு கடைசி  சீட்தான் கிடைத்ததா என்று கேட்டு கிண்டலடித்துக் கொண்டுள்ளனர். ஆனால் பாஜகவினரோ, அண்ணாமலை கொடுத்த லிஸ்ட்டை வைத்துத்தான் விவாதமே நடந்துள்ளதாக பெருமை அடித்து வருகின்றனர். அண்ணாமலை எப்போதுமே எங்குமே நடுநாயகமாக இருப்பதை விரும்ப மாட்டார், எளிமையாக இருப்பதுதான் அவரது அடையாளமே.. இங்கும் அதை அவர் கடைப்பிடித்துள்ளார் என்று பாஜகவினர் இதற்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.