Anna university.. அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. பாதுகாப்பை உறுதி செய்ய என்ன பண்ணலாம்?

Su.tha Arivalagan
Dec 29, 2024,05:15 PM IST

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மாணவியரின் பாதுகாப்பு தொடர்பான என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற யோசனைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன.


அண்ணா பல்கலைக்கழக விடுதியில் பாலியல் தொல்லை இருப்பதாக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் புகார் அளித்த மாணவியின் தனிப்பட்ட விபரங்கள், எஃப்ஐஆர் காப்பி உள்ளிட்டவைகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி பற்றி தனிப்பட்ட தகவல்களும், எஃப்ஐஆர் காப்பியும் போலீசாரின் உதவி இல்லாமல் எப்படி வெளி வந்திருக்க முடியும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினர். திமுக அரசையும் மிக கடுமையாக விமர்சனம் செய்தார். 


பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தானாக முன் வந்து தலையிட்ட சென்னை ஐகோர்ட், சில முக்கிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளது. போலீசாருக்கும் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. தமிழக கவர்னர் ரவியும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன், மாணவர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


இருந்தாலும் இது அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ப்ளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக தேர்வு செய்யும் காலேஜாக இருப்பது ஐஐடி. ஐஐடி.,யில் இடம் கிடைக்கா விட்டால் அவர்களின் அடுத்த தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் தான். அண்ணா பல்கலைகழகத்தில் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளே அதிகம். வெளியில் தங்குவது பாதுகாப்பு இல்லை என இவர்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கவே நினைக்கிறார்கள்.


இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்துள்ள பாலியல் தொல்லை விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. என்ன தான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கோர்ட் உறுதி அளித்தாலும் ஞானசேகரன் போல் வெளியில் தெரியாமல் எத்தனை பேர் இருப்பார்கள்? இனி ஒரு முறை இப்படி நடக்காது என யாரால் உத்தரவாதம் அளித்து விட முடியும்? எங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என பெற்றோர்கள் தரப்பில் இருந்து பலவிதமான கேள்விகள் முன் வைக்கப்படுகிறது. 




பாதுகாப்பை உறுதி செய்யும் வழிகள் :


* அண்ணா பலைக்கழக நிர்வாகம், மாணவர்களிடையே இருக்கும் தேவையற்ற பதற்றத்தை போக்கும் முயற்சிகளில் முதலில் ஈடுபட வேண்டும்.


* பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பல நுழைவாயில்களை மூடி விட்டு, முக்கியமான சில வழிகள் மட்டும் அனைவரும் வந்து செல்லும் படி வைக்கலாம். 


* அந்த முக்கியமான கேட்களில் சிசிடிவி கேமிராக்களை பொறுத்தி யார் வருகிறார்கள், வெளியே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்கலாம்.


* கேட்களின் என்ட்ரி ரிஜிஸ்டர் ஒன்றை வைத்து வெளியாட்களின் வருகையை கண்காணிக்கலாம்.


* மாணவர்களிடமும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பல்கலைக்கழகத்திற்குள் வெளியாட்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.


* பல்கலைகழகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள், புதியவர்கள், சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் இருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்க குழு ஒன்றை அமைக்கலாம்.


* பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். 


* பல்கலைக்கழக வளாகத்திற்குள் சாதாரண உடையில் காவலர்களையும் கூட கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்