அண்ணா பல்கலை. வழக்கு.. செல்போனில் பேசியது ஞானசேகரன்தானா.. சிறையில் நடந்த குரல் மாதிரி சோதனை!
சென்னை: பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனின் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து மாணவி பாலியல் வழக்கில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு ஏழாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஞானசேகரன் பேசியதாக உலா வரும் ஆடியோவில் அவர் குறிப்பிட்ட யார் அந்த சார் என்ற கேள்வி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
இதனால் அவர் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஞானசேகரனுடைய குரல் மாதிரியை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரின் குரல் பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையை நேற்று தொடங்கிய நீதிபதி சுப்ரமணியன் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் படி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் குரல் மாதிரி இன்று பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக ஞானசேகரன் புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு, தடவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிந்தபிறகு ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்