மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

Meenakshi
Sep 19, 2024,04:52 PM IST

அமராவதி: ஆந்திராவில், மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியிலிருந்து, புதிய மதுபான கொள்கை அமலுக்கு வருகிறது. அதன்படி எந்த பிராண்டின் மதுவையும் ரூ.99க்கு (180மிலி) வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மது கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.


மதுவுக்கு எதிரான மகாத்மா காந்தியின் பிறந்த மாதத்தில் இந்த மது பான விலை மாற்றத்தை மாநில அரசு அமல்படுத்துவது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மதுபானக் கொள்கை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. குஜராத், பீகார் மாநிலங்களில் மதுபானங்களுக்கு  அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளுடன் மது விற்கப்பட்டு வருகிறது. கோவா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பெரிய அளவில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. 



இத்தகைய நிலையில், ஆந்திராவில் புதிய மதுபான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தரம், அளவு மற்றும் சரியான விலையை உறுதி செய்வதே இந்த மதுபான கொள்கையின் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கே.பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதிய கொள்கையில் லாட்டரி முறையில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்படும். உரிமம் ஒதுக்கப்பட்ட பிறகு எல்லா இடங்களிலும் காலை 10 மணி  முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். உரிமக் கட்டணம் என்பது ஏரியாவை பொறுத்து மாறுபடும். ரூ.50 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை நான்கு அடுக்குகளில் உரிமை கட்டணம் இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் விற்பனையில் 20 சதவீதம் லாபத்தைப் பெறுவார்கள். இதில் குறைந்தபட்சம் 10 சதவீதம் இடங்களில் கள் விற்பனையும் அனுமதிக்கப்படும். 

தனியாக பிரீமியம் கடைகளுக்கு பெர்மிட் வழங்கப்படும். 12 பிரீமியம் கடைகளுக்கு 5 ஆண்டுகள் உரிமம் வழங்கப்படும். இந்த பிரீமியம் கடைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15 லட்சமாகவும் உரிமக் கட்டணம் ரூ.1 கோடியாக இருக்கும். அதே நேரம் திருப்பதியில் பிரீமியம் கடைகள் அனுமதிக்கப்படாது. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு மதுபானக் கொள்கையைத் தவறாகக் கையாண்டது. இதனால் மாநில  அரசுக்கு மிகப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தரமற்ற மதுவை வழங்கியதால், உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை எல்லாம் சரி செய்யும் விதமாக இப்போது புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம் "என்றார்.

இந்த புதிய மதுபானக்கொள்கையின் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்  கிடைக்கும் என கூறப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்