பிரதமர் மோடியிடம் நாயுடு கேட்ட அந்த 3 விஷயம்... டில்லி பயணத்தின் பின்னணி இது தானா?
டில்லி : டில்லி சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியிடம் 3 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் டில்லி சென்றதற்கான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது.
ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு, முதல்வரான பிறகு முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் டில்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 20 நிமிடங்கள் சந்தித்து பேசி உள்ளார். பிரதமரை மரியாதை நிமித்தமாகவும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையிலும் சந்தித்து பேசினார் சரி, நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார்? அவரிடம் என்ன பேசினார்? என்ற கேள்வி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி, ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதால் அது தொடர்பாக கோரிக்கை வைக்க தான் சந்திரபாபு நாயுடு டில்லி சென்றுள்ளாராம். பிரதமர் மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்த போது மூன்று முக்கியமான கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளாராம். முதலில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்க தான் நாயுடு, பட்ஜெட் சமயத்தில் டில்லி சென்றுள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அது கிடையாதாம்.
சிறப்பு அந்தஸ்திற்காக அல்ல, ஆந்திராவிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக பேசத் தான் நேரில் சென்றுள்ளாராம். போலவரம் நீர்பாசன திட்டத்தின் முதல் கட்ட பணிகளை நிறைவு செய்வதற்கும், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும். அதோடு ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாக உள்ள அமாராவதியின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.15,000 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் முன் வைத்துள்ளாராம்.
புதிதாக அமைய உள்ள அமாராவதி தலைநகரில் சாலைகள், பாலங்கள், நீர்பாசனம், குடிநீர் திட்டம், துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி முதலீடு செய்ய சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தான் மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளாராம். கூட்டணி கட்சி தலைவர் என்பதால் சந்திரபாபு நாயுடு கேட்ட கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. மத்தியில் தற்போது மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கொடுத்த 16 லோக்சபா எம்.பி.,க்களின் ஆதரவும் ஒரு முக்கியம் காரணம்.
தான் முன் வைத்த கோரிக்கைகள் நிச்சயம் பட்ஜெட்டில் இடம்பெறும் என்பதை மறைமுகமாக சொல்வது போல், பிரதமரை சந்தித்த போட்டோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் நலம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.