ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 29 - சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

Aadmika
Jan 14, 2024,09:23 AM IST

திருப்பாவை பாசுரம் 29 :


சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.




பொருள் :


கண்ணா! அதிகாலையில் எழுந்து உன்னுடைய பொன்னான தாமரை போன்ற மலர் பாதங்களை வணங்குவதற்காக வந்திருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்பதை நீ கேட்க வேண்டும். மேய்ச்சல் தொழிலை செய்து, வாழ்ந்து வரும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களுடைய இந்த சிறிய விரதத்தை  சாதாரணமாக நினைத்து ஒதுக்கி விடாதே. நீ தரும் பொன், பொருள் போன்ற சிறிய பரிசுப் பொருட்களை பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த விரதத்தை இருக்கவில்லை. இந்த பிறவியில் மட்டும் இல்லாமல் இனி எடுக்கப் போகும் 49 பிறவிகளுக்கும் நீ எங்களின் குலத்தில் பிறக்க வேண்டும். உனக்கு நாங்கள் உறவாக இருக்க வேண்டும். என்றென்றைக்கும் உன்னை போற்றி பாடி, உனக்கு மட்டுமே தொண்டு செய்யும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கு தந்து அருள் செய்ய வேண்டும். அந்த ஒன்றை தவிர வேறு எந்த ஆசையும் எங்களுக்கு கிடையாது. உலக இன்பங்களின் மீது ஏற்படும் ஆசைகளை அகற்றி விடு.


விளக்கம் :


இறைவனிடம் அவனின் அருளை தவிர மற்ற எதையும் எதிர்பார்த்து விரதம் ஏற்படக் கூடாது என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் வலியுறுத்தி உள்ளார். உன்னை போற்றி பாடுவதற்கு பொன், பொருள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை. உன்னுடைய அருள் ஒன்று மட்டுமே போதும். இந்த பிறவியில் மட்டும் இல்லாமல் இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உன் மீது பக்தி கொள்ள வேண்டும். உன்னை மட்டுமே போற்றி பாடி, சேவை செய்ய வேண்டும். மற்ற ஆசைகளை அனைத்தையும் மனதில் இருந்து அகற்றி விடு என கண்ணனிடம் கேட்பதன் மூலம் கண்ணன் மீது ஆண்டாள் கொண்ட அதீத பக்தி தெரிகிறது. 


கண்ணனிடம் கொண்ட அதீத பற்றின் காரணமாக அவனை ஒருமையில் பேசி அழைத்த குற்றத்தை பொறுத்துக் கொண்டு அருளை வழங்க வேண்டும் என நேற்றைய பாடலில் கேட்ட ஆண்டாள். இன்றைக்கு இந்த பிறவியில் மட்டுமல்ல இனி பிறக்க போகும் அனைத்து பிறவிகளிலும் எங்களுக்கு நீ உறவாக வேண்டும் என உரிமையுடன் வரம் கேட்கிறார். மகாபாரத போருக்கு முன் தங்களுக்கு ஆதரவாக நின்று போர் செய்ய வேண்டும் என கண்ணனிடம் கேட்வதற்காக அர்ஜூனன், துரியோதனன் இருவரும் கண்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களின் அழைப்பை ஏற்ற கண்ணன், தான் இருக்கும் பக்கத்தில் தன்னுடைய படைகள் இருக்காது என்றும், தன்னுடைய படைகள் இருக்கும் பக்கத்தில் தான் இருக்க மாட்டேன் என்றும் நிபந்தனை விதித்தார்.


கண்ணனை சாதாரணமாக எண்ணிய துரியோதனன், படைகள் வேண்டும் என கேட்டதால் அவன் தோற்றுப் போனான். ஆனால் அர்ஜூனனோ, எனக்கு நீ மட்டும் போதும் கண்ணா. உன்னை தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்றான். இறைவன், பாண்டவர்கள் பக்கம் நின்றதாலேயே அவர்கள் வென்றனர். அது போல் இறைவனிடம் வேண்டும் போது எதையும் எதிர்பார்க்காமல், நீ என்னுடன் இரு. எனக்கு உன்னுடைய அருள் மட்டும் போதும் என்று தான் வேண்டிக் கொள்ள வேண்டும்.