ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 26 : மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

Aadmika
Jan 11, 2024,09:51 AM IST

திருப்பாவை பாசுரம் 26 :


மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

பாலன்ன வண்ணத்துள பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.


பொருள் :




பக்தர்களின் அதிகமாக அன்பு கொண்ட திருமாலே! மணி போன்று ஜொலிக்கும் திருமேனியை உடையவனே! மார்கழியில் நீராடி, உன்னை தரிசித்து, துதித்து வேண்டுவோர் வேண்டுவன அனைத்தையும் தரக்கூடியவனே. உலகத்தை எல்லாம் நடுநடுங்க வைக்கும் பால் சோற்றின் நிறம் கொண்ட பாஞ்சசன்னியத்தை கையில் ஏந்தியவனே. உன்னுடைய கையில் இருக்கும் பாஞ்சசன்யத்தை போல் சங்குகள் எங்கும் முழங்குகின்றன. பறைகள் பலரும் பெரும் சத்தத்துடன் ஒலிக்கின்றன. உன்னை துதித்து பலரும் பல்லாண்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். கோலமிட்டு, அழகிய விளக்கேற்றி, பாவை நோன்பினை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள். ஆலிலை மேல் கடலில் மிதப்பவனே, அவர்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை தந்தருள வேண்டும்.


விளக்கம் :


திருப்பாவையின் ஒவ்வொரு பாடலிலும் கண்ணனின் புகழையும், பாவை நோன்பு பற்றியும் புகழ்ந்து பாடி வந்த ஆண்டாள், மார்கழி மாதம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பாவை நோம்பை நிறைவு செய்ய தயாராகும் அடியார்கள் பற்றி இந்த பாடலில் கூறி உள்ளார். மார்கழியில் அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாலை சென்று தரிசித்தாலே அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக் கூடியவர் என மார்கழி மாத விரத மகிமையை எடுத்துக் கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து பெருமாலின் கையில் இருக்கும் பாஞ்சசன்யம் என்ற சங்கின் மகிமையை பற்றி குறிப்பிடுகிறார்.


கடலுக்கு அடியில் சென்று மறைந்திருந்த பாஞ்சசன் என்ற அசுரனை, தன்னுடைய குருவிற்கு அளித்த வாக்கிற்காக வதம் செய்து, அதனை சங்காக்கி, தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டவர் கிருஷ்ண பரமாத்மா. இந்த அசுர அம்சமான சங்கு என்பதால் இதை ஊதினாலே எதிரிகள் நடுநடுங்கி போவார்கள். அதனால் தான் குருஷேத்திர போரின் போது கெளரவர்களை நடுங்க செய்வதற்காக பாஞ்சசன்யத்தை கண்ணன் ஊதினார். உன்னை நினைத்து துதிப்பவர்களுக்கு மட்டுமல்ல பலவிதமான இசைக்கருவிகள் இசைத்து உன்னை பாடிக் கொண்டிருப்பவர்களுக்கும் பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கான உன்னுடைய அருளை தர வேண்டும் என  ஆண்டாள் வேண்டிக் கேட்கிறார்.