ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 24 : அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி

Aadmika
Jan 09, 2024,10:26 AM IST
திருப்பாவை பாசுரம் 24 :

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்!திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.

பொருள் : 



அன்று வாமன அவதாரத்தில் உன்னுடைய திருவடிகளால் மூன்ற உலங்களையும் அளந்தாய். அந்த திருவடிகளை வணங்குகிறோம். தெற்கே உள்ள இலங்கைக்கு சென்று அங்கு செருக்கால் அறிவிழந்த ராவணனை வதம் செய்த உன்னுடைய வீரத்தை போற்றி வணங்குகிறோம். சக்கர வடிவில் வந்து உன்னை அழிிக்க முயன்ற சகடன் என்னும் அசுரனை வதம் செய்த உன்னுடைய புகழை போற்றி வணங்குகிறோம். கன்றுக்குட்டியின் வடிவில் வந்த அசுரனையும் தடியை போல் தூக்கி எறிந்து வென்ற உன்னுடைய போர் திறத்தை போற்றி வணங்குகிறோம். கோவர்த்தன மலையை குடையாக பிடித்து, இந்திரன் அனுப்பிய பெரும் மழையில் இருந்து கோகுலத்தில் இருந்தவர்கள் அனைவரையும் காத்த உன்னுடைய கருணையான குணத்தை போற்றி வணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் கொஞ்சமும் அசராமல் அவர்களை வெல்லும் உன்னுடைய கையில் இருக்கும் வேல் போற்றி. இப்படிப்பட்ட பெருமை மிக்க உனக்கு எப்போதும் சேவை செய்து வாழ்வதே பெரும் இன்பம் என உணர்ந்து இன்று உன்னை காண வந்திருகு்கிறோம். எங்களுக்கு உன்னுடைய அருளை வழங்க வேண்டும்.

விளக்கம் :

திருப்பாவை பாசுரங்களில் இது மிகவும் முக்கியமான பாசுரமாகும். இதற்கு போற்றி பாசுரம் என்று பெயர். திருமாலின் பல்வேறு அவதாரங்களையும், அந்த அவதாரங்களின் போது திருமால் நிகழ்த்திய சாகசங்களையும், அதன் மூலம் தீமையை வென்று அடியாளர்களை காத்த பெருமையை போற்றி பாடும் பாசுரம் என்பதால் இதை தினமும் படித்து வந்தால் தைரியம் அதிகரிக்கும். அது மட்டுமின்றி ஆண்டாள் தன்னுடைய பாசுரங்களில், இந்த பாசுரத்தில் மட்டுமே திருமாலின் வாமன அவதாரம், ராம அவதாரம், கண்ணன் அவதாரம் ஆகிய மூன்று அவதாரங்களை பாடி உள்ளார். இந்த மூன்று அவதாரங்களும் மனித உருவில் திருமால் வந்து, நீதியை நிலைநாட்டியவை. அதனாலேயே இவற்றை மிக உயர்வாக ஆண்டாள் பாடி உள்ளார்.

இந்த பாசுரத்தில் உன் கையில் இருக்கும் வேல் போற்றி என குறிப்பிடுகிறார். வேல் என்பது முருகப் பெருமானின் கையில் இருக்கும் ஆயுதமாகும். ஆனால் பெருமாள் கையில் சங்கும், சக்கரமும் மட்டுமே ஏந்தி இருப்பார். இங்கு வேல் என ஆண்டாள் குறிப்பிடுவது முருகனும், பெருமாளும் ஒன்று தான் என்றும் பொருள் கொள்ளலாம். அதோடு, வேல் என்பது ஞானத்தின் அடையாளமாகும். அதே போல் இது சக்தியின் மறுவடிவமாகும். அதனாலேயே வேலை இந்த இடத்தில் ஆண்டாள் போற்றி பாடி உள்ளார்.