ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 21 .. "ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப"

Aadmika
Jan 06, 2024,09:05 AM IST

திருப்பாவை பாசுரம் 21 :


ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.




பொருள் :


எப்போது கேட்டாலும், எத்தனை அளவுடைய பாத்திரத்தை நீட்டினாலும் அவைகள் முழுவதும் நிரம்பி வழியும் வகையில் பால் தரும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களை வைத்திருக்கக் கூடிய நந்தகோபாலரின் மகனாகிய கண்ணனே எழுந்திரு. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே, அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே. உலகிற்கே ஒளி தரக் கூடிய சூரியனே. தூக்கத்தில் இருந்து எழுந்து கொள். உன்னை எதிர்த்தவர்களை வலிமை இழக்கச் செய்து, உன்னுடைய அருளை பெறுவதற்காக உன்னுடைய வாசலில் கிடக்க செய்வாய். அது போல நாங்களும் உன்னுடைய வாசலில் வந்து, உன்னுடைய அருளை பெறுவதற்காக காத்துக் கிடக்கிறோம். உன்னை போற்றிப் பாடி, உன்னுடைய திருவடிகளை பணிய காத்துக் கொண்டிருக்கிறோம். உன்னை புகழ்ந்து பாட வந்துள்ளோம். எங்களுடைய பக்தியை ஏற்று, எங்களுக்கு அருள் செய்வாயாக.


விளக்கம் :


பெரிய பெரிய மன்னர் எல்லாம் உனக்கு பயந்து, உன்னிடம் பணிந்து, உனக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அடியாளர்களாகிய நாங்கள் பயத்தில் இல்லாமல், பாசத்துடன் காத்திருக்கிறோம் என்கிறார் ஆண்டாள். ஆயர்பாடியின் பசுக்களின் வளத்தை போற்றி இந்த பாடலை துவக்கிய ஆண்டாள், இயற்கையோடு கண்ணனின் ஆற்றலையும் ஒப்பிட்டு உயர்த்திப் பாடுகிறார். நீ எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும் பக்தி என்னும் வலிமையான ஆயுதத்தை வைத்திருக்கும் எங்களுக்கு குழந்தையை போல தான். அதனால் நாங்கள் கூப்பிட்டதும் நீ வந்து தான் ஆக வேண்டும் என கண்ணனை உரிமையுடன் அழைக்கிறாள் சூடிக் கொடுத்த சுடர்கொடியாகிய கோதை நாச்சியார்.