ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 10.. "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்"

Aadmika
Dec 26, 2023,08:20 AM IST

ஆண்டாள் தன்னுடைய பாடல்களில் கண்ணின் பெருமைகளை மட்டுமின்றி பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, தற்கால நிலை ஆகியவற்றுடன் தன்னுடைய நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக பல பாடல்களை இயற்றி உள்ளார். ஒவ்வொரு பாடலிலும் இறைவழிபாட்டினால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதையும் ஆண்டாள் குறிப்பிட்டே அந்த பாடலை இயற்றி உள்ளார்.




திருப்பாவை பாசுரம் 10 :


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.


பொருள் : 


முந்தைய பிறவியில் திருமாலை வழிபட்டு, நோன்பு இருந்ததன் பலனாக இந்த பிறவியில் சொர்க்கம் போன்ற சுகமாக வாழும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்ணே, உன்னுடைய வீட்டின் கதவை தான் திறக்க மாட்டாய். பேசக் கூட மாட்டாயா? தெய்வீக மணம் வீசும் துளசியை அணிந்த நம்முடைய தலைவனாகிய நாராயணனை போற்றி பாடினால் அதற்கான பலனை அவன் தருவான். முந்தைய காலத்தில் வாழ்ந்த கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாக சொல்வார்கள். அந்த கும்பகர்ணன் தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உனக்கு கொடுத்து விட்டானா? கிடைப்பதற்கு அரிய அணிகலன்களை அணிந்த பெண்ணே, எந்த வித பதற்றமும் இன்றி, உன்னுடைய சோம்பலை விடுத்து, வந்து கதவை திற.


விளக்கம் :


யாராவது நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை கும்பகர்ணனை போல் தூங்குகிறாயே என்போம். இப்படி கிண்டலாக கும்பகர்ணனை உதாரணம் காட்டி சொல்லும் வழக்கம் இப்போது மட்டுமல்ல ஆண்டாள் காலத்திலேயே இருந்துள்ளது என்பதை இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் நீண்ட நேரமாக எழுப்பியும் யாராவது தூக்கத்தில் இருந்து எழவில்லை என்றால் நாம் எரிச்சல் உணர்விற்கு ஆட்படுவோம். ஆனால் ஆண்டாள் அப்படி செய்யாமல் மிக பொறுமையாக, நகைச்சுவையாக தனது தோழியை கிண்டல் செய்து எழுப்புகிறார்.