மார்கழி 26 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 26 : மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 26 :
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
பொருள் :
பக்தர்கள் மீது மிகவும் அன்பு கொண்ட திருமாலே! நீல நிற மணியின் நிறத்தவனே! உயரிய பக்தி நிறைந்தவர்கள் காலம் காலமாக மேற் கொள்ளப்படும் மார்கழி பாவை நோன்பை கடைபிடிப்பவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தருபவனே! உலகையே அதிர வைக்கும் வகையில் பால் சாத நிறத்தில் இருக்கும் உன்னுடைய பாஞ்சஜான்யம் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரியமுரசுகளையும், இசைத்து, கற்றறிந்த பலரும் உன்னை போற்றி பல்லாண்டு பாடியும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! இந்த நோன்பை நல்ல படியாக நிறைவு செய்வதற்காக உன்னுடைய அருளை தந்து இந்த நோன்பு முழுமை அடைய அருள் புரிய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்