மார்கழி 24 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 24 : அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 24 :
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள் :
வாமன அவதாரத்தில் மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, பிறகு திரிவிக்ரமனாக மாறி உன்னுடைய திருவடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தாயே, அந்த திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரத்தில் சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன்னுடைய வீரத்தை வணங்குகிறேன். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே அடியில் வீழ்த்தியவனே! உன்னுடைய புகழை வணங்குகிறேன். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாக கருதி, விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன்னுடைய திருவடிகளை வணங்குகிறேன். கோவர்த்தன கிரியை குடையாக்கி, ஆயர்குலத்தை இந்திரன் அனுப்பிய போய் மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்தை வணங்குகிறேன். பகைவர்கள் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழிப்பவனே! அந்த வேலாயுதத்தை வணங்குகிறேன். உன்னுடைய வீரதீரங்களை போற்றி பாடி, உன்னுடைய அருளை பெறுவதற்கு இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது கருணை கொண்டு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்