அட்ஜெஸ்ட் செய்ய மறுத்த நடிகை.. 17 முறை ரீடேக் வாங்கிய இயக்குநர்.. ஷாக் தரும் மலையாள சினிமா!

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:21 PM IST

திருவனந்தபுரம்: நடிகையிடம் அத்துமீறி நடந்து கொண்ட நடிகரை கட்டிப்பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சியில் கிட்டத்தட்ட 17 முறை திரும்பத் திரும்ப நடிக்க வைத்துள்ளார் ஒரு மலையாள இயக்குநர். நீதிபதி  ஹேமா கமிட்டி அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையாளத் திரையுலகில் தலைவிரித்தாடும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த நீதிபதி கே. ஹேமா கமிட்டி அறிக்கையில் பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நடிகைகள் எந்த அளவுக்கு அங்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நீதிபதி கமிட்டி மிகத் தெளிவாகவும் விரிவாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


17 முறை கட்டிப்பிடிக்க வைத்த இயக்குநர்:


அதில் ஒரு நடிகை குறித்த நீதிபதி கமிட்டி கூறியுள்ள தகவல் அதிர வைக்கிறது. சம்பந்தப்பட்ட நடிகை ஒருவர் படப்பிடிப்பின்போது பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளார். சக நடிகரிடமிருந்து வந்த பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர் அந்த நடிகை. அவரது ஆசைக்க இணங்கவும் மறுத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பின்போது அந்த நடிகரும், இந்த நடிகையும் கணவன் மனைவியாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இதனால் அந்த நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாயிற்று.


ஒரு காட்சியில் தேவையில்லாமல் அந்த நடிகரை கட்டிப்பிடிப்பது  போல காட்சி வைத்து அதைத் திரும்பத் திரும்ப எடுத்துள்ளார் இயக்குநர். கேட்டால் காட்சி சரியாக வரவில்லை என்று காரணம் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 17  முறை ரீடேக் எடுத்தாராம்.  நிஜத்தில் தான் சந்தித்த பாலியல் அத்துமீறல்களை படப்பிடிப்பின்போதும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த முறை காட்சி தத்ரூபமாக வேண்டும் என்ற போர்வையில் செய்துள்ளனர். மன ரீதியாக அந்த நடிகையை தொந்தரவு செய்து பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளனர்.




சொல்வதக் கேட்க வேண்டும்:


மலையாள சினிமா ஆண்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆண்கள்தான் பெரும்பாலும் இயக்குநர்களாக, கதாசிரியர்களாக, தயாரிப்பாளர்களாக உள்ளனர். எனவே அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற மன நிலையில்தான் அவர்கள் பெண்களைப் பார்க்கிறார்கள். பெண் என்றால் அவர் சம்பாதிக்க நடிக்க வருகிறார்.. நாம் சொல்வதை அவர் கேட்பார் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். அதுவே ஆணாக இருந்தால் அவர்கள் கலை தாகத்துடன் நடிக்க வருவதாக இவர்கள் முடிவு செய்து கொள்கிறார்கள். இந்த பாரபட்சம்தான் பெண்களை இங்கு இரண்டாம் தர நிலைக்குத் தள்ளியுள்ளது.


மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு அதிக அளவில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மொத்தம் 17 விதமான பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர். பாலியல் துன்புறுத்தல்கள் அதில் பிரதானமாக உள்ளது. போக்குவரத்து வசதியிலும் பாரபட்சம் உள்ளது. தங்களது விருப்பத்தை மறுக்கும் நடிகைகளை விதம் விதமாக துன்புறுத்துகிறார்கள். மகளிர் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகின்றன. அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. டாய்லெட் வசதி, உடை மாற்றும் வசதி கூட சரியாக செய்து தரப்படுவதில்லை.


மிரட்டல்கள் அதிகம்:


பெண்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. சினிமாவின் சில  துறைகளில் பெண்களை அனுமதிப்பதே இல்லை, சட்டவிரோதமாக அவர்களை தடை செய்து வைத்துள்ளனர். ஏதாவது கேள்வி கேட்டால், கோபப்பட்டால், உரிமையை கேட்டால் அவர்களை திரைத் துறையிலிருந்தே ஒழித்து விடுவோம் என்று கூறி மிரட்டுவது சர்வ சாதாரணமாக உள்ளது. ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மிக மோசமான பாலியல் பாரபட்சத்தை இவர்கள் நடத்துகிறார்கள்.


ஒழுங்கீனங்கள் மலிந்து போய்க் கிடக்கின்றன. மது அருந்துவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, பணியிடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது சர்வ சாதாரணமாக உள்ளது. பணியிடங்களில் ஆபாசமாக பேசுவது, தவறாக வர்ணிப்பது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். பல நேரங்களில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்கள் போடப்படுவதில்லை.  பேசிய ஊதியத்தையும் பலர் தருவதில்லை.  ஆண்களுக்கு ஒரு சம்பளம்,  பெண்களுக்கு ஒரு சம்பளம் என வைத்துள்ளனர். இது சட்டவிரோதமானது.


டெக்னிக்கல் பிரிவுகளில் பெண்களை அனுமதிப்பதே இல்லை, அதில் அவர்கள் வேலை பார்க்கவும் விடுவதில்லை. சைபர் அட்டாக்குகளும் மலையாளத் திரையுலகில் அதிகம் உள்ளன. பெண்களுக்கு போதிய சட்ட விழிப்புணர்வு இல்லை, அது கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.