அம்மா இல்லை.. ஆனால் மோடி இருக்கிறார்.. எனது சின்னம் குக்கர்.. வெற்றி பெற வைங்க.. தினகரன் பிரச்சாரம்

Su.tha Arivalagan
Mar 24, 2024,05:01 PM IST

பெரியகுளம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன்.


அதிமுகவில் இருந்தபோது பெரியகுளம் தொகுதி எம்.பியாக இருந்தவர் தினகரன். பின்னர் அந்தத் தொகுதி கலைக்கப்பட்டு தேனி தொகுதியாக மாறியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொகுதியில் களம் காண்கிறார் தினகரன். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவுக்கு திருச்சி, தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இதில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டாளம்மன் கோவிலில் வைத்து அறிவித்தார் டிடிவி தினகரன். இதில் திருச்சியில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், மாவட்ட மாநகர செயலாளருமான செந்தில்நாதன் போட்டியிடுவதாகவும், தேனியில் தானே போட்டியிடுவதாகவும் தினகரன் இன்று அறிவித்தார். இதையடுத்து உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார். தேனி தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் வேன் மூலம் அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.




வழியெங்கும் அவருக்கு அமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தான் போட்டியிடுவது குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. மக்கள் முடிவு செய்வார்கள். நான் பேச மாட்டேன்.. செயலில் காட்டக் கூடியவன். இந்த மண் எனக்கு அரசியலில் பிறப்பு கொடுத்தத மண். இந்த மண்ணின் மக்களின் வீட்டில் நானும் ஒரு பிள்ளை. அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்களுக்குத் தேவையானதை நான் செய்வேன்.


ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் என்னை இங்கே போட்டியிடக் கூறினார்கள். இதனால்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். எனக்கு வழி விட்டு விட்டு ஓபிஎஸ் அவர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அவரும்  வெற்றி பெறுவார், நானும் வெல்வேன்.. கூட்டணிக் கட்சியினரும் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார் தினகரன்.


பின்னர் வேன் மூலம் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டபோது குக்கரைக் காட்டி மக்களிடையே தனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு பேசியபடி சென்றார் தினகரன்.