சூர்யா, ஜீவா, கார்த்தி.. "ஐடி கார்டு" கொடுத்த அமீர்.. என்னெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க!

Su.tha Arivalagan
Nov 26, 2023,03:42 PM IST

சென்னை: தமிழ்த் திரையுலகில் அமீர் ஒரு அருமையான கிரியேட்டர்.. சாதாரண பின்னணி கொண்ட அமீர், தான் சார்ந்த தெற்கத்தி மண்ணின் வாசத்தையும், வாழ்க்கையையும் கலந்து கொடுத்த படமான பருத்தி வீரனை மட்டுமே பலரும் கொண்டாடுகிறார்கள்.. ஆனால் அதற்கு முன்பே தனது வீரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அமீர்.


பளிச்சென சொல்ல வேண்டும் என்றால் சூர்யா, ஜீவா, கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் ஒரு அட்டகாசமான "ஐடி கார்டை" கொடுத்தவர் அமீர் என்று தைரியமாக சொல்லலாம்.. அந்த மூன்று ஹீரோக்களுமே கூட இதை நிச்சயம் மறுக்க மாட்டார்கள்.. அவர்கள் மறுத்தாலும், ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.. அதுதான் நிதர்சனம்.




மிக மிக வேகமாக உயர்ந்து அதே வேகத்தில் அமைதியாகிப் போன ஒரு ஆச்சரிய இயக்குநர் அமீர் சுல்தான் எனப்படும் அமீர்... மிகச் சிறந்த கதை சொல்லி..  திரைக்கதையை பிரமாதமாக பின்னுவதில் கில்லாடி.. இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர். சேது, நந்தா என இரண்டு படங்களில் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். அதன் பிறகு அவரிடமிருந்து வெளியேறி வருகிறார்.


பாலாவின் நீட்சியாகவே அமீரை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. காரணம், பாலாவின் பிற உதவியாளர்களிடம் இல்லாத திறமை,  அமீரிடம் இருந்தது. பாலாவைப் போலவே வித்தியாசமான பார்வையுடன் அவதாரம் எடுத்தவர் அமீர்.. ஒரு படைப்பை எப்படி உருவாக்க வேண்டும் என்ற மாஜிக்கில் பாலாவையே மிஞ்சியவர் என்றும் சொல்லலாம்.




அமீரின் முதல் படமே அட்டகாசமான ட்ரீட்மென்ட். நந்தாவில் சீரியஸாக, குரூரமாக பார்க்கப்பட்ட சூர்யாவை அப்படியே வேறு கோணத்தில் மாற்றிக் கொடுத்தார் தனது முதல் படமான மெளனம் பேசியதே-வில். 

சூர்யாவிடம் சீரியஸ்னஸ் இருக்கும்.. ஆனால் அதற்குள் சற்று காமெடியையும் கலந்து கொடுத்து, சூர்யா என்ற நடிகரை ஒரு அட்டகாசமான பெர்பார்மராக அடையாளம் காட்டினார் அமீர்.


சாதாரண சூர்யாவை, நடிகர் சூர்யாவாக பாலா அடையாளப்படுத்தினார் என்றால், அவரை பல கலை வித்தனாக உயர்த்தியவர் அமீர்தான். நந்தாவிலிருந்து சூர்யாவின் நடிப்புப் பயணம் புதிய தொடக்கத்தைப் பெற்றது என்றால், மெளனம் பேசியதே படத்திலிருந்து Versatalityக்கு மாறி வீரியமான நடிகராக அவர் உயர்ந்தார். சூர்யாவின் கெரியரில் நிச்சயம் மறக்க முடியாத ஒரு படம் இந்த மெளனம் பேசியதே.


அடுத்து அமீர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் ரொம்பவே வித்தியாசமானது. தமிழ் சினிமா அதுவரை பார்க்காத கதை அது.  மனமுதிர்ச்சியற்ற, மனநலம் பாதித்த, மன சிதைவு கொண்டவர்களை நம்மவர்கள் பெரும்பாலும் "சைக்கோ" என்ற கதாபாத்திரத்திற்குள் கொண்டு போய் அடைத்து விட்டு ரத்த வாடை வீச வீச படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஆனால் ராம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரமாக தனது நாயகனைப் படைத்தார் அமீர்.




ஆட்டிசம் பாதித்த ஒரு இளைஞன்.. அவனும் அம்மாவும் மட்டுமே அந்தக் குடும்பத்தில்.. அம்மா மீது அத்தனை பாசம் மகனுக்கு. ஒரு நாள் அம்மா கொலையாகிறார்.. கொன்றது மகன் என்பது அத்தனை பேரின் நம்பிக்கை.. ஆனால் நடந்தது வேறு.. இது நிஜத்தில் நடந்த ஒரு சம்பவம்.. அந்த சம்பவத்தின் கடைசிக் காட்சிகளை மட்டும் மாற்றி அட்டகாசமான திரைக்கதையாக மாற்றி அசத்தியிருப்பார் ராம்.


இந்தப் படத்தின் விசேஷமே கதாபாத்திரங்களாக வந்தவர்கள் நடிக்காமல் அதில் வாழ்ந்ததுதான். ஜீவாவுக்கு இதுதான் அவரது கெரியரில் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம். அதற்கு முன்பு வரை அவர் ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். ராம் வந்து அவரை ஒரு பிரில்லியன்ட் பெர்பார்மராக உயர்த்திக் காட்டியது. இந்தப் படத்திற்காக ஜீவாவுக்கும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் சைப்ரஸ் பட விழாவில் விருதுகள் கிடைத்தன.




அதன் பிறகு வந்ததுதான் பருத்தி வீரன். இந்தப் படத்தில் அமீர் உச்சம் தொட்டிருப்பார். கதை, திரைக்கதை, வசனம் என எல்லாவற்றிலும் மிரட்டிய படம் பருத்தி வீரன். இந்தப் படத்தின் நாயகன் வேண்டுமானால் கார்த்தியாக இருக்கலாம்.. ஆனால் அந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் அமீர்தான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக தானே நடித்துக் காட்டி கார்த்தியை நடிக்க வைத்தவர் அமீர். இதை கார்த்தியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.


ஒரு புதுமுக நடிகருக்கு முதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லலாம். கார்த்திக்கு அப்படி ஒரு அட்டகாசமான அறிமுகத்தைக் கொடுத்தவர் அமீர். ஏகப்பட்ட விருதுகளை அள்ளியது.. இரண்டு தேசிய விருதுகள் உள்பட. அதுவரை கவர்ச்சிகரமாக நடித்து வந்த பிரியாமணியை, கிராமத்து புழுதி படிய, எண்ணெய் வழியும் முகத்துடன் நடக்க விட்டு அசத்தலான டிரான்ஸ்பார்மேஷனைக் கொடுத்தார் அமீர். அவருக்குள் இருந்த "நடிகையை" வெளிக் கொண்டு வந்தார். தேசிய அளவில் சிறந்த நடிகையாக அடுத்த கட்டத்துக்கு அவரை மாற்றினார்.. இன்று  வரை தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் முத்தழகாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் பிரியாமணி.





அமீரின் திரைப்பயணம் மிக மிக சிறியது, குறுகியது.. இயக்கியது நான்கு படங்கள்தான்.. ஆனால் அது பதித்த முத்திரை இன்னும் 40 வருடங்களுக்குப் பிறகும் பேசப்படும்.. மிகப் பிரமாதமான கலைஞனான அமீர் திடீரென நடிப்பின் மீது கவனத்தைத் திருப்பி திசை மாறிப் போனார்.. அவரது கிரியேட்டிவிட்டியும் அத்தோடு கரைந்து போய் விட்டது. இன்னும் நிறைய கலைப்படைப்புகளை அவர் கொடுத்திருக்கக் கூடும்.. கொடுத்திருக்க வேண்டும்.. அது வராமல் போனது நம் துரதிர்ஷ்டமா அல்லது அவரது நேரமா என்று தெரியவில்லை.


ஆனால் அமீர் என்ற அற்புதமான கிரியேட்டரை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.