அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸாஸின் .. முன்னாள் மனைவி.. 2வது கணவரிடமிருந்து விவாகரத்து!
Jan 13, 2023,12:51 PM IST
வாஷிங்டன்: அமேஸான் நிறுவனர் ஜெப் பெஸாஸின் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட் தனுத 2வது கணவர் டேன் ஜூவட்டிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் இந்த விவாகரத்து தொடர்பான இறுதி தீர்ப்பில் வாஷிங்டன் கோர்ட் நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இதையடுத்து இந்த விவாகரத்து இறுதியாகியுள்ளது.
சியாட்டிலைச் சேர்ந்த டேன், ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். தங்களது சொத்துக்கள், கடன்கள் போன்றவை எப்படி பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த ஒப்பந்தத்தில் சமீபத்தில் ஸ்காட்டும், டேனும் கையெழுத்திட்டிருந்தனர். ஸ்காட் தரப்பில் ஜீவனாம்சம் எதுவும் கோரப்படவில்லை.
இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமண பந்தம் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். தற்போது அது இறுதியாகியுள்ளது.
ஸ்காட்டும், ஜெப் பெஸாஸும் 25 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம். 2019ம் ஆண்டு இந்த திருமண பந்தம் முடிவுக்கு வந்தது. நாவல் ஆசிரியையான ஸ்காட் அமெரிக்காவின் 3வது பெரும் பணக்காரப் பெண்மணி ஆவார். பெஸாஸுக்கும், ஸ்காட்டுக்கும் நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்றபோது ஸ்காட்டுக்கு, 38.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேஸான் பங்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வருவாயின் பெரும் பகுதியை தான தர்மப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறார் ஸ்காட் என்பது குறிப்பிடத்தக்கது.