விளக்கெண்ணெய் குடிச்சது மாதிரி ஏன் முழிக்கிறே.. கலகலக்க வைக்கும்.. கொட்டை முத்துச் செடி!
- பொன் லட்சுமி
தமிழ்நாட்டில் இன்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் பிரதான பயிராக பயிரிடப்படுவது ஆமணக்கு செடி. இந்த செடியை, `கொட்டை முத்துச் செடி’ என்றும் சொல்வார்கள். குத்துச் செடியாக வளரக்கூடிய இதன் இலைகள் பார்ப்பதற்கு முரடாகவும், கொஞ்சம் அகலமாகவும் உள்ளங்கை வடிவிலும் இருக்கும். இதன் விதைகளில் நச்சுத்தன்மை உண்டு. ஆனால், விதையிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பிறகு அதில் நச்சுத்தன்மை இருக்காது.
நம் முன்னோர்கள் இந்த ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். இதில் மருத்துவ குணங்கள் மட்டுமல்லாது அழகுக்காகவும் இதனை பயன்படுத்தலாம்.
ஆமணக்கில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. சிற்றாமணக்கிற்கும் பேராமணக்கிற்கும் உள்ள வேற்றுமை என்னவென்றால் அவற்றின் கொட்டைகளின் அளவுதான் .சிற்றாமணக்கில் சிறிய அளவுள்ள கொட்டை இருக்கும், பேராமணக்கில் பெரிய அளவுள்ள கொட்டை இருக்கும். இந்த இரண்டு வகைகளுக்கும் ஒரே மருத்துவ பயன் தான். இதில் கொட்டை மட்டுமல்லாது அதிலுள்ள இலை அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அனைத்துமே பயனுள்ளது தான்.
ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெயை, ஆங்கிலத்தில் `Castor Oil’ என்பார்கள். இது, மற்ற எண்ணெய்களைப்போல் அல்லாமல் அடர்த்தி அதிகமாகவும் பிசுபிசுப்புத்தன்மையுடனும் காணப்படும். இதற்கு கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு அதிகமாக சேட்டைகள் செய்து மாட்டிக்கொண்டு முழிக்கும் குழந்தைகளை பார்த்து விளக்கெண்ணைய குடிச்சது மாதிரி ஏன் முழிச்சுக்கிட்டு இருக்குறனு சொல்லுவாங்க. கிராமப்புறங்களில் இந்த விளக்கெண்ணெயைத்தான் குழந்தைகளுக்கு பேதி மருந்தாகப் இன்றும் பயன்படுத்துகிறார்கள். உடல் சூட்டால் குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் இந்த எண்ணையை தலை, தொப்புள், உள்ளங்கால் பகுதிகளில் வைத்து தேய்க்கும் போது அது சூட்டைத் தணிக்கும்.
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்களை மணிக்கணக்கில் பயன்படுத்துவதால் பலருக்கு கண்களில் வறட்சி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு . தொப்புளில் தினமும் விளக்கெண்ணெய் விட்டு வந்தால் கண்களில் ஏற்படும் வறட்சி குறைந்து கண் பார்வை தெளிவடையும். மேலும் அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்கள் முதலில் சாதாரண நீர் கொண்டு முகம் மற்றும் கண்களை கழுவ வேண்டும். பின்பு நல்ல காய்ந்த துண்டு பயன்படுத்தி அதை துடைக்க வேண்டும். அதன் பின்பு சில துளி ஆமணக்கு எண்ணெய்யை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூசவேண்டும். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் பண்ணி விடலாம்.
இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு ஈட்டு வந்தால் அடர்த்தியான அழகான கண் இமைகளை பெறலாம். அது மட்டும் இல்லாமல் இதில் வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் இது முடி வளர்ச்சி மற்றும் முடி உடைவதை தடுக்க உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் வைத்து மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். வாரத்தில் ஒரு நாள் உடம்பிற்கு விளக்கெண்ணெய் தேய்த்து குளித்து வரும்போது உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்களில் சிலருக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்காமலிருக்கும். அவர்கள் மார்பகங்களில் விளக்கெண்ணெயைத் தேய்த்துவிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதேபோல பால் கட்டிக் கொண்டால் ஆமணக்கு இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். அது மட்டும் இல்லாமல் வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து இந்த ஆமணக்கு இலை இதை விளக்கெண்ணையில் லேசாக வதக்கி கால் மூட்டுகளில் வீக்கம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் சரியாகும்.
இன்று பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் இடுப்பு வலிக்கு ஆமணக்கு விதை பதினைந்து எடுத்து பசும்பாலில் வேக வைத்து தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் விரைவில் இடுப்பு வலி மற்றும் கை கால் வலிகள் குணமாகும். அதேபோல வயதானவர்கள் அனுபவிக்கும் பெரிய வலி என்னவென்றால் மூட்டு வலி தான். அதற்கு ஆமணக்கு இலை எருக்கு இலை ஊமத்தை இலை சீந்தில் இலை இவை நான்கையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு வேகவைத்து இந்த இலைகளை ஒரு துணியில் வைத்து முடிந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் தீராத நாட்பட்ட மூட்டு வலிகள் ஓரே வாரத்தில் குணமாகும்.
மருத்துவத்தில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் கோவில்களிலும் விளக்கேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானது இந்த ஆமணக்கு எண்ணெய்தான். கும்பகோணம் அருகேயுள்ள திருக்கொட்டையூரில் உள்ள திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயிலில் இந்த ஆமணக்குச் செடிதான் தலவிருட்சமாக இருந்து வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் சிவனோடு சேர்த்து இந்த ஆமணக்குச் செடியையும் வணங்குகிறார்கள். இந்த ஆமணக்குச் செடியில் தான் மூலவரான லிங்கம் தோன்றியதாக இந்தக் கோயில் வரலாற்றில் கூறப்படுகிறது.
அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அழகு பொருட்கள் என்ற ஒன்றை தனியாக பயன்படுத்தவில்லை. தங்கள் அழகைப் பராமரிப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பெரும்பாலும் இந்த விளக்கெண்ணெயை தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். தலைமுடி பராமரிப்பாக இருக்கட்டும், முகத்தை அழகு படுத்துவதாக இருக்கட்டும், சமையலில் ருசிக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் இருக்கட்டும், நோய்க்கு மருந்தாக இருக்கட்டும், தெய்வத்தை வணங்குவதற்காக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் இந்த விளக்கெண்ணையை அதிகமாக பயன்படுத்தினார்கள்.
அன்று பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே இந்த எண்ணெயை தயாரித்தார்கள்.. செடியில் இருந்து விதையை சேகரித்து ஒரு பெரிய இரும்பு சட்டியில் போட்டு வறுத்து பின் அதை உரலில் போட்டு குத்தி எடுத்து பெரிய பானையில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த விதையை போட்டு காய்த்து எடுப்பார்கள். எண்ணெய் மேலே பிரிந்து தனியாக வந்ததும் அதை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்து தினமும் பயன்படுத்தினார்கள். அன்றைய காலத்தில் உள்ள வயதானவர்கள் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த விளக்கெண்ணை தான்.
ஆனால் இன்று கால மாற்றத்தினால் விளக்கெண்ணெய் பயன்படுத்துவது பெருமளவு குறைந்துள்ளது. இப்பொழுது உரலில் போட்டு இடிப்பதற்கு பதில் தோல்களை மட்டும் தனியாக பிரிப்பதற்கு மிஷின் வந்துவிட்டது. மெஷின் மூலமாகவே இப்பொழுது எல்லாம் எண்ணெய் எடுத்து விடுகிறார்கள். இன்று பல பிராண்டுகளில் பல பெயர்களில் எண்ணெய்கள் விற்பனைக்கு வந்து விட்டதால் இந்த விளக்கெண்ணையை பயன்படுத்துபவர்கள் பெருமளவு குறைந்து விட்டார்கள். அதனால் நோய்களும் அதிகரித்து விட்டது. இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாதிரி உணவு பொருள்களை சாப்பிட்டு வந்தாலே பெருமளவு நோய்களை தவிர்த்து விடலாம். பொதுவாக நம்மில் பலர் எதையுமே இயற்கையாக அதே சமயம் மலிவாக கிடைக்கக்கூடிய பொருட்களை உதாசீனம் தான் படுத்துகிறார்கள். ஆனால் அந்த பொருட்களில்தான் எண்ணற்ற வகையான சத்துக்கள் அடங்கியிருக்கும்.. இந்த மாதிரி பொருட்கள்ல எல்லாம் கலப்படம் இருக்காது ஆரோக்கியம் மட்டுந்தான் இருக்கும்.