அண்ணாமலையுடன் எந்தத் தகராறும் இல்லை.. கூட்டணி தொடரும்.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Apr 27, 2023,10:37 AM IST

டெல்லி: அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்தத் தகராறும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது அதிமுக பாஜகவினர் இடையிலான உரசலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று தெரிகிறது.

சமீப காலமாக அதிமுக, பாஜக தலைவர்களிடையே அடிக்கடி வாய்ச் சண்டை மூண்டு வந்தது. குறிப்பாக அண்ணாமலை  அதிமுக குறித்தும், ஜெயலலிதா குறித்தும் கூறிய கருத்துக்களை அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக இரு தரப்பும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தன.



இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் பின்னர் முதல் முறையாக தனது கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பாஜக தரப்பில் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்த சந்திப்பே, இரு தரப்புக்கும் இடையே சமரசம் செய்து வைக்கத்தான்று பேச்சு அடிபடுகிறது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தந்த கட்சித் தலைவர்கள் அந்தந்த கட்சிகளின் கொள்கைகள்,கோட்பாடுகளுக்கேற்ப செயல்படுகிறார்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

அதிமுக பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது. கூட்டணி தொடர்கிறது.  அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்தக் கூட்டணியை வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைப்போம். அதற்கேற்ப செயல்படுவோம். அதிமுக விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே உள்ளது. எனவே அதிமுக எங்களுக்குத்தான். அதில் எந்தக் குழப்பமும் இல்லை.

துரோகிகளைத் தவிர வேறு யார் கட்சிக்கு வந்தாலும் தாராளமாக வரவேற்போம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு இங்கு இடமில்லை. 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சிஏஜி அறிக்கையில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. அதிமுக ஆட்சி நன்றாக இருந்ததாக மக்களே சொல்கிறார்கள். அதுதான் முக்கியம். திமுகவின் பழிவாங்கல் அரசியலே முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள். உண்மையில் இந்த திமுக ஆட்சி எப்போது விலகும் என்றுதான் மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.