ஏ டூ இசட் எல்லாமே பெண்கள்தான்.. சென்னையில் மகளிருக்காக பிங்க் நிற வாக்குச்சாவடிகள்!

Meenakshi
Apr 18, 2024,06:46 PM IST

சென்னை: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்று என பெண் வாக்காளர்களுக்காக பிங்க் நிற வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்களும் பெண்கள்தான்.


2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.  வாக்கு மையங்கள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில்,  சென்னையில் உள்ள 16  சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு வாக்குச்சாவடி பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் மூதாட்டிகள் என தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட  உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த வாக்குச்சாவடியில் பணிபுரியப் போவதும் பெண்கள்தான். அதாவது தேர்தல் அதிகாரிகள், காவலர்கள் அனைவருமே பெண்களாக இருப்பார்கள். அனைவரும் பிங்க் நிற ஆடை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இந்த பிங்க் நிற மகளிர் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் அடுத்தடுத்து தேர்தல்களில் அதிகளவில் பிங்க் நிற வாக்கு சாவடிகள் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.