காவிரியில் உரிய நீரைத் தராத கர்நாடகத்திற்குக் கண்டனம்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Manjula Devi
Jul 16, 2024,05:16 PM IST

சென்னை:   காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றப்பட்டது.


கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலக மாநாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 




இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் எஸ் பி வேலுமணி, ஓ.எஸ். மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ் எஸ் பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருந்தகை, ம.ம.க சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், பாஜக சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே மணி, சதாசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூ. வீரபாண்டியன், தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 


இவர்கள் தவிர அரசு சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி, வில்சன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காவிரியில் நீர் திறந்து விடாமல் கர்நாடகம் செயல்பட்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகத்திற்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.