நாம் தமிழர் கட்சி.. அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்பு.. 40 தொகுதிகளிலும் ஒலிக்கப் போகும் "மைக்"!

Manjula Devi
Mar 28, 2024,07:17 PM IST

சென்னை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் 40 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன. அதே போல் விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் எப்போது வரும்.. எப்போது வரும்.. என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெகு விமர்சையாக ஜனநாயக திருவிழா நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியும் உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விளவங்கோடு சட்டசபைத் தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது அக்கட்சி.




இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்து, இன்று அந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தாக்கல் செய்த ஒரு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு விட்டன. அதாவது 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். இன்று இரவு அவர் நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.