இனி ஓன் யூஸ் காரையும்.. டாக்சி போல பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் இனி எந்த வகையான கார்களையும் வாடகைக் கார்களாக பயன்படுத்த முடியும். அதற்கான அனுமதியையும், உரிய கட்டணத்தையும் போக்குவரத்துத் துறைக்கு செலுத்தினால் போதுமானது என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இனி அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து பயன்படுத்தலாம். தமிழகத்தில் குறிப்பிட்ட வகை கார்களை மட்டும் தான் வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்று இருந்த விதி தற்போது மாறியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுற்றுலா மேம்பாட்டு நோக்கில் சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கனவே உள்ளது. தற்போது தமிழ்நாட்டுக்கும் இது அறிமுகமாகியுள்ளது. அதன்படி, இனிமேல் சொந்த வாகனங்களை சுற்றுலா நோக்கில் பயன்படுத்த விரும்பினால் அதற்குரிய கட்டணத்தைக் கட்டி லைசென்ஸ் வாங்கிக் கொண்டு பயன்படுத்தலாம்.
இந்த உத்தரவு காரணமாக டாக்சிகள், கேப்களுக்கான பற்றாக்குறை முடிவுக்கு வரும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் வைத்திருப்போர், அதில் ஒன்றை டாக்சி போல மாற்றி பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.