"கலைஞர் 100".. ரஜினி, கமல் முதல் அமிதாப், மம்முட்டி வரை.. டிசம்பரில் Sambhavam Loading!
சென்னை: தமிழ் திரை கலைஞர்கள் சார்பில் "கலைஞர் 100" விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு இந்திய அளவில் உள்ள முக்கிய பிரபல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
திரைத்துறை சார்பில் மிகப் பெரிய விழா நடந்து பல வருடங்களாகி விட்டது. இந்த நிலையில் கலைஞர் 100 என்ற பெயரில் மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டையொட்டி பிரமாண்ட விழாவை நடத்தவுள்ளது திரைத்துறை.
தமிழ் சினிமா வரலாற்றில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும் ஆகிய கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24ம் தேதி பிரமாண்டமாக இவ்விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து அழைத்தனர். அதே போல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய், அஜீத் குறித்துத் தெரியவில்லை.
தற்போது இந்த விழாவை பேன் இந்தியா விழாவாக மாற்றுகின்றனர். அதாவது, அமிதாப் பச்சன், மம்முட்டி, மோகன்லால், சீரஞ்சீவி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவிலான திரைக் கலைஞர்களைத் திரட்டி நடத்தினால் அகில இந்திய அளவில் திமுகவுக்கு வெளிச்சம் கிடைக்கச் செய்யும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.