மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!
சென்னை: கல்லூரி மாணவர்களிடையே மெத் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி சென்னை போலீசார் போதை ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த மாதம் சென்னை முகப்பேர் அருகில் தனியார் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ஆப் மூலம் போதைப் பொருள் சப்ளை செய்த வழக்கில் ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தொடர் விசாரணையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இது மட்டுமல்லாமல் விலை உயர்ந்த மெத்தம் பெட்டமைன் வகை போதைப் பொருட்களையும் மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய தனி படை போலீசார் அவர்களிடம் உள்ள மொபைல் நம்பர்களை பறிமுதல் செய்து அந்த செல்போன் நம்பர்களுக்கு யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது தொடர்பாக துப்பு துலங்கினர். இதில் கடந்த 30 ஆம் தேதியில் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பா இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கஞ்சா ஆயில் டப்பாகளை பறிமுதல் செய்து அதில் தொடர்புள்ள கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்களிடம் உள்ள செல்போன் நம்பர்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மொபைல் நம்பரும் இருந்துள்ளது. இதையடுத்து பல மணி நேரம் அலிகான் துக்ளக்கிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக அலிகான் துக்ளக் (26) மற்றும் அவரது கூட்டாளியான செய்யது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகிய 3 பேரையும் ஜெ.ஜெ நகர் போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து தற்போது மன்சூர் அலிகானின் மகனும் உதவி இயக்குனருமான அலிக்கான் துக்ளக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்