ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் உடல் அடக்கம்.. மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடக்கிறது

Su.tha Arivalagan
Feb 28, 2024,06:46 PM IST

மாஸ்கோ:  ரஷ்ய சிறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் நல்லடக்கம், வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடைபெறும் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


மரியினோ மாவட்டத்தில் உள்ள போரிஸோவ்ஸ்கோயே கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.  முன்னதாக அவரது உடல் அடக்கம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. மேலும் சில கல்லறைத் தோட்டங்கள் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்ததால் புதிய குழப்பமும் ஏற்பட்டது. தற்போது எல்லாம் சரியாகி உடல் அடக்கம் முடிவாகியுள்ளது.


இந்த மாதத் தொடக்கத்தில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார் அலெக்ஸி நவல்னி. அவரது மறைவு குறித்து இதுவரை அதிபர் விலாடிமிர் புடின் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். புடின்தான் இதற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் பிடன் உள்ளிட்டோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.




கடுமையான புடின் எதிர்ப்பாளரான நவல்னி தொடர்ந்து அவருக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அலெக்ஸி உடல் அடக்கத்திற்கு திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரது அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.