Akshaya Tritiya: விநாயகர் எழுத்தாணியை எடுத்து.. மகாபார இதிகாசத்தை எழுத ஆரம்பித்தது இந்த நாளில்தான்!

Su.tha Arivalagan
May 10, 2024,05:22 PM IST

- பொன் லட்சுமி


ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் இன்று ஒரு சிறப்பான நாள் தான் இந்த அட்சய திருதியை. அட்சயம்  என்றால் வளர்ந்து கொண்டே செல்வது அல்லது குறையாமல் இருப்பது என்று பொருளாகும். இன்றைய நாளில் எந்த செயலை செய்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மேலும் நல்ல பலன்களை தரும். இந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் அது மென்மேலும் பெருகும். தொடங்கிய எந்த ஒரு முயற்சியும் வளர்ந்து நமக்கு நன்மையை மட்டுமே கொடுக்கும். சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் வரும் திருதியை திதியை தான்  நாம் அட்சய திருதியை  என்று அழைக்கிறோம்.. இந்த நாட்களில் விலை உயர்ந்த தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது நமது நம்பிக்கை.


இந்துக்களின் இதிகாச முறைப்படி இந்த அட்சய திருதியை நாளில்தான் வேதவியாசர்  மகாபாரத   இதிகாசத்தை விநாயகரிடம் எழுத சொல்லி கட்டளையிட்டார் என்று இதிகாசங்களில் கூறப்படுகிறது.. அது மட்டுமல்லாமல் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான   பரசுராமர் அவதரித்தது இந்த நல்ல நாளில் தான்.


செல்வ அதிபதி குபேரர்




இன்றைய நாளில் நாம் எந்த கடவுளை வழிபட வேண்டும்?  செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்க வேண்டும் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. லட்சுமி, குபேரன் , அதுமட்டுமல்லாமல்  சிவசக்தி,  அன்னபூரணி, லட்சுமி நாராயணர் போன்ற தெய்வங்களின் படங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து  வழிபடலாம். அப்படி வழிபடும்போது குறையில்லாத செல்வத்தை பெறலாம் என்பது நம்மில் பலரது நம்பிக்கை.. சரி இதற்கான விரதம் எப்படி  இருப்பது வாருங்கள் பார்க்கலாம்.


அட்சய திருதியை அன்று அதிகாலை எழுந்து நீராடி பூஜை அறையில் கோலம் போட வேண்டும் அதன் பின் அதன் மேல் சிறு பலகை வைத்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். பின் அதன் மேல் ஒரு வாழை இலையை வைத்து அதன் நடுவில் பச்சரிசியை பரப்பி அதன் மேல் ஒரு சிறு செம்பில் நீர் வைத்து  மஞ்சள் தடவிய தேங்காயை அதன் மேல் வைத்து அதை சுற்றி மாவிலை வைத்து கட்டி கலசம் போல் ஆக்க வேண்டும். அதன்பின் அந்த கலசத்திற்கு பூ பொட்டு வைத்து லஷ்சுமி குபேரர் போன்ற படங்களில் ஏதேனும் ஒன்றை வைத்து அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அதன் பின் காமாட்சி விளக்கு அல்லது பெரிய குத்துவிளக்கு ஏதாவது ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். பின் மஞ்சளில் பிள்ளையார் செய்து அதை இலையில் வலது ஓரத்தில் வைக்க வேண்டும். 


குலதெய்வ வழிபாடு சிறந்தது




வாங்கிய விலை உயர்ந்த  பொருள்களை  கலசத்தின் முன்வைத்து அதற்கு தீபாராதனை காட்ட வேண்டும். விநாயகரை மனதார வேண்டிக் கொண்டு அதன் பின் மகாலட்சுமி தாயே இந்த கலசத்தில் எழுந்தருள வேண்டும் என்று வணங்கி தீபாராதனை  காட்ட வேண்டும்.. மீண்டும் மாலையில் கலசத்திற்கு தீபாராதனை காட்டி கலசத்தை வடக்கு புறமாக நகர்த்தி வைத்தால் விரதம் முடிவுற்றது  என்று அர்த்தம். இன்றைய நாளில் பயன்படுத்தும் அரிசி தேங்காய் போன்றவற்றை  அடுத்த வெள்ளி கிழமை  பூஜையில் பொங்கல் வைத்து பயன்படுத்தலாம். இந்த அட்சய திருதியை நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வது என்பது  மிக முக்கியமான ஒன்றாகும்.


இன்றும்  கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு கலசம் வைத்து, அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி என்ற விரதத்தை   கடைப்பிடிக்கிறார்கள். இதன் மூலம் பார்வதி தேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். இந்த விரதம் இருப்பதனால்  தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திருமணம், மழலை பாக்கியம், சுமங்கலித்தன்மை, குடும்ப ஒற்றுமை, எல்லோரின் உடல் நலம் பெற வேண்டி  இந்த விரதம் இருக்கிறார்கள்...  இந்த விரதம் முடிந்ததும் தங்களால் இயன்ற அளவில் தானமும் வழங்குவார்கள் .


இந்த நாட்களில் விரதம் இருப்பது, பூஜை செய்வது புதிய பொருட்களை வாங்குவது இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானது நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய  கடனை முழுமையாக செய்வதும் நம்மால் இயன்ற அளவு தானம் அளிப்பதும் தான் ஆகும். இந்த அட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான காரியங்கள் என்னவென்றால் கோவிலுக்கு சென்று புனித நீராடி, இறைவனை வழிபட்டு அதன்பின்  பித்ரு காரியம் முறைப்படி செய்து  நம்மால் இயன்ற  அளவுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும்..

மேலும் இந்த நாள் இந்துக்களிடையே பெரும் மத முக்கியத்துவம் வாய்ந்த நாளாக நம்பப்படுகிறது.. மேலும் இது தங்கம் வாங்குதல், திருமணம், நிச்சயதார்த்தங்கள், வேலைகள் மற்றும் புதிய வணிக முயற்சிகள் போன்ற மங்களகரமான செயல்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


எந்த நேரத்தில் தங்கம் வெள்ளி வாங்கலாம்?




பலருக்கு எந்த நேரத்தில் தங்கம் வெள்ளி வாங்கலாம் என்று குழப்பம் இருக்கும் அவர்கள்  குரு சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். ஏனென்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய தங்கம் குரு கிரகத்தை குறிக்கும். அதேபோல்  வெள்ளி சுக்கிரனை குறிக்கும் .. எனவே குரு சுக்கிர ஹோரைகளில் தங்கம் வெள்ளி வாங்குங்கள்..லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்ட நகைகளை வாங்கலாம்..


இந்த நாட்களில் தங்கம் வெள்ளி மட்டும் தான் வாங்க வேண்டுமா என்றால் அதுதான்  இல்லை ..  ஏனென்றால் இந்த நாட்களில் நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தும் பன்மடங்கு பெருகும் என்பது அன்றிலிருந்து  இன்று வரை நம் மக்களின் வழக்கமாகும். எனவே உப்பு, பச்சரிசி, வெல்லம் போன்றவற்றையும் வாங்கலாம்..  அது மட்டுமல்லாமல் எப்படியும் மாதாமாதம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவோம். அதனை இந்த நாளில் வாங்கலாமே.. இல்லை நம்மால் முடிந்த அளவுக்கு அரிசி வாங்கலாம்.


இன்றைய நாளில் தங்கம் என்பது பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய பொருட்களாக மாறிவிட்டது.. நடுத்தர வர்க்கத்தினர் பாமர மக்கள் என்று தங்கத்தை வாங்க முடியாதவர்கள்  இன்று உப்பு, மஞ்சள்,அல்லது மஞ்சள் கிழங்கு ஏதேனும் ஒன்றே வாங்குங்கள்  அதிலும் மஞ்சளுக்கு என்று  தனி மவுசு உண்டு அதனால் மஞ்சளை வாங்கி வீட்டில் வையுங்கள் சுபிட்சம் உண்டாகும்.


கல்வி ஞானம் பெருகட்டும்




அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன் கிடைக்கும்  அந்த வகையில் நாம் என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.. குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுங்கள். அவர்களின் கல்வி ஞானம் பெருகும்.. புண்ணிய நதிகளில் நீராடுங்கள்.  உங்கள் பாவங்கள் போகும், பவானி சங்கமேஸ்வரர் என்னும் கோயிலில் முக்கூடல் சங்கமிக்கும் ஒரு நதி இருக்கிறது. அந்த நதியின் நீராடினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.. அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம் சிறந்த பலனை கொடுக்கும்.. 


அதுமட்டுமல்லாமல் இன்றைய நாளில் அன்னதானம் செய்வது மிக சிறந்த பலனை தரும்..  காசியில் அன்னபூரணி தாயார் ஈசருக்கு இந்த நாளில் தான் அவர் பிச்சை பாத்திரம் நிரம்பும் அளவிற்கு  அன்னம் அளித்தார் என்று புராண கதைகள் கூறுவது உண்டு.  அதனால் இன்றைய நாளில் நீங்கள் அன்னதானம் செய்தால் அந்த கடவுளுக்கே அன்னமிட்டது போல் ஆகும்... ஏழைகள் ,மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள் இவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் பல பிறவிகளையும் தாண்டி உங்களுக்கு அந்த புண்ணியம் வந்து சேரும்... அதேபோல  ஏழைகளுக்குத் தயிர் சாதம் கொடுப்பது   பதினோரு தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்..


பொருள்கள் மட்டுமல்லாது இந்த நாளில் நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பதும் ஐதீகம்.. இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் அனுபவிக்க கூடிய மிகப்பெரிய துன்பம் என்னவென்றால் இந்தக் கோடை வெயில் தான். அதனால் நம்மால் முடிந்தவரை ஒரு மரக்கன்றையாவது நட முயற்சி செய்யுங்கள் அல்லது தானம் வழங்குங்கள்  இந்த நல்ல காரியம் ஒவ்வொரு வருடமும் பல மடங்கு பெருகும்.. நம் பூமி பாலைவனம் ஆகாமல் இருப்பதற்கு நம்மால் முயன்ற ஒரு சிறு உதவி  தான் இது.