இதெல்லாம் ரொம்ப ஓவரு.. ஒரே நாளில் 3வது முறையாக உயர்ந்த தங்கம்.. கன்னத்தில் கைவைத்த பெண்கள்!

Meenakshi
May 10, 2024,05:22 PM IST

சென்னை: அட்சயதிருதியை எதிரொலியாக இன்று மக்கள் பெருமளவில் தங்கம் வாங்க குவிந்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரே நாளில் 3வது முறையாக விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்ந்தினாலும், நகை கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. 


இன்றைய அட்சய திருதியை யாராலும் மறக்க முடியாது. ஏன் தெரியுமா? வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 3 முறை நகை விலை உயர்ந்துள்ளது. காலையிலேயே 2 முறை உயர்ந்த தங்கம் மாலையில் மாற்றம் இருக்காது என்று நினைத்த நிலையில், மாலையிலும் நகை விலை உயர்ந்துள்ளது. காலையில் ரூ.360 என இரண்டு முறை  ரூ.720 உயர்ந்த தங்கம், மாலையிலும்  ரூ.520 உயர்ந்துள்ளது.




அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று  நினைத்த மக்கள் முன்டியடித்துக்கொண்டு நகை நடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். காலை 6 மணி முதல் நகை கடைகளும் திறந்திருந்த நிலையில், நகை வாங்குபவர்கள் அதிகளவில் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் பரவலாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் இன்று நகை விலை 3 முறை உயர்ந்துள்ளது.


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது காலையில் இருந்த விலையில் இருந்து 65 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.