தேசியவாத காங்கிரஸை நல்லா பாத்துக்கிட்டீங்க சித்தப்பா.. சரத் பவாருக்கு ஷொட்டு வைத்த அஜீத் பவார்!
மும்பை: மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி தரப்படாமல் உள்ள நிலையில் தனது சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத்பவாரை புகழ்ந்து பேசியுள்ளார் அஜீத் பவார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்ததும் 1999ம் ஆண்டு இக்கட்சியை உருவாக்கினார். சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்சியை உடைத்தார் சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவார். தேர்தல் ஆணையத்தில் நடந்த பஞ்சாயத்தின்போது அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் ஒரிஜினல் கட்சி, சரத் பவார் தனது கட்சி பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் தனது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் என்று மாற்றி விட்டார் சரத் பவார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அஜீத் பவார் கட்சியும், அவர் சார்ந்த பாஜக கூட்டணியும் சந்தித்தன. அஜீத் பவார் கட்சிக்கு வெறும் ஒரு சீட்டில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அவரது மனைவி சுனிதா போட்டியிட்ட பாராமதி தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்தார். அங்கு சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
தற்போது மோடி தலைமையில் 3வது முறையாக பாஜக ஆட்சியமைத்துள்ளது. இந்த முறை கூட்டணி பலத்தில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இந்த அமைச்சரவையில் தனது கட்சிக்கு கேபினட் பதவி கேட்டிருந்தார் அஜீத் பவார். ஆனால் அது மறுக்கப்பட்டு இணை அமைச்சர் பொறுப்பே தரப்பட்டது. இதை அஜீத் பவார் நிராகரித்து விட்டார். எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார், ஆனால் கேபினட் அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று அவர் கூறி விட்டார். இதனால் பாஜக தர்மசங்கடமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கட்சியின் நிறுவன தின நாள் நேற்று மும்பையில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அஜீத் பவார் தனது சித்தப்பா சரத் பவாரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், கேபினட் பதவிக்கு குறைந்து எந்தப் பதவியையும் ஏற்க மாட்டோம் என்று பாஜகவிடம் தெளிவாக கூறியிருக்கிறோம். பலருக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று அவர்கள் கூறினர். இருப்பினும் எங்களது நிலையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதேசமயம், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். வரும் மாதங்களில் கூட்டணி மேலும் வலுவடையும். இப்போது எங்களது பலம் 284 ஆக உள்ளது. விரைவில் இது 300ஐத் தாண்டும்.
கட்சியை கடந்த 24 வருடங்களாக சிறப்பாக தலைமை தாங்கி நடத்தியுள்ளார் சரத் பவார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் சமயத்தில் தேசியவாத காங்கிரஸுக்கும், ஆட்சிக்கும் எதிராக நெகட்டிவான விஷயங்களை எதிர்க்கட்சிகள் உருவாக்க முயன்றனர். அது பலிக்கவில்லை என்றார் அவர்.
நடந்து முடிந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுனில் தத்கரே மட்டும வெற்றி பெற்றுள்ளார். அவர் ராய்காட் தொகுதியில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.