நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட..வயநாடு மக்களுக்கு 3 நாட்களுக்கு இலவச சேவை.. ஏர்டெல்
வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களில் வேலிடிட்டி முடிவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு மூன்று நாள் இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் போன்றவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல் மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது .அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இந்த நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி இதுவரை ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதேபோல் பலரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
இருப்பினும் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அனைத்து உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து பல மாநிலங்களும் கேரளா அரசுக்கு உதவ முன்வந்துள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏர்டெல் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மொபைல் போன் வேலிடிட்டி முடிந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் எனவும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் வயநாட்டில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.