1000 விமானிகளை வேலைக்கு எடுக்கப் போகும் ஏர் இந்தியா.. சூப்பர் Hiring!
Apr 28, 2023,11:23 AM IST
டெல்லி: 470 விமானங்களை வாங்கும் அதிரடி முடிவைத் தொடர்ந்து தற்போது 1000 விமானிகளை வேலைக்கு எடுக்கப் போகிறது ஏர் இந்தியா. கேப்டன்கள், டிரெய்னர்கள் இதில் அடக்கம்.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனது கட்டமைப்பை விரிவுபடுத்துகிறது. மிகப் பெரியஅளவில் விமானங்களை வாங்க சமீபத்தில் ஒப்பந்தம் போட்டது. அதன்படி போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை டாடா குழுமம் வாங்குகிறது.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 1000 விமானிகளை வேலைக்கு எடுக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திடம் 1800க்கும் மேற்பட்ட விமானிகள் பணியில் உள்ளன். ஆனால் புதிய விமானங்கள் வருவதால் கூடுதல் விமானிகளை அது பணியில் அமர்த்தவுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்தியஅரசிடமிருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. ஏர் இந்தியா குழுமத்தில் மொத்தம் நான்கு விமான நிறுவனங்கள் உள்ளன. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட், விஸ்தாரா. விஸ்தாரா நிறுவனத்தை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியா நடத்தி வருகிறது.
விரைவில் அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஏர் இந்தியா என்ற பொதுப் பெயரில் இயங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.