ஏர் இந்தியா விமானத்தில்.. பெண் ஊழியர்களைத் தாக்கிய பயணி.. நடுவானில் பரபரப்பு!

Su.tha Arivalagan
Apr 10, 2023,01:49 PM IST
டெல்லி: டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில்  பயணித்த பயணி ஒருவர், பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு மேல் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்தது. அதன் பின்னர் அந்த நபர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லியிலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பிச் சென்றது . பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பயணி தகராறில் இறங்கினார். விமான ஊழியர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. மாறாக, 2 பெண் ஊழியர்கள் மீது அந்த பயணி தாக்குதலில் இறங்கினார்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த விமானி விமானத்தை டெல்லிக்கே திருப்ப முடிவு செய்தார். டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் போலீஸாரை உஷார்படுத்தினர். இதையடுத்து விமானம் டெல்லிக்கு வந்து இறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணி தரையிறக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.



அந்த பயணி மீது டெல்லி போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த குழப்பத்தால் விமானம் லண்டன் செல்வதில் ஏற்பட்ட தடையால் விமான நிறுவனம் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்டும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று காலை 6.35 மணிக்குப் புறப்பட்டுச் சென்று, 9.42க்கு மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்தது.

சமீப காலமாக நடுவானில் பயணிகள் தகராறு செய்வது அதிகரித்து வருகிறது. இதேபோலத்தான் முன்பு ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்து மோசமாக நடந்து கொண்டார். அதேபோல இன்டிகோ விமானத்தில் அவசர கால கதவுகளைத் திறக்க சிலர் முயற்சித்து பரபரப்பை ஏற்படுத்தினர் என்பதும் நினைவிருக்கலாம். பயணிகளின் இந்த பொறுப்பற்ற செயல்களால் விமான பயணங்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.