சென்னை ஏர்ஷோவுக்கு சிறந்த ஒத்துழைப்பு.. தமிழ்நாடு அரசுக்கு.. விமானப்படை தலைமைத் தளபதி நன்றி

Meenakshi
Oct 08, 2024,02:00 PM IST

சென்னை:   விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு இந்திய விமானப்படை தலைமைத் தளபதி அமர்பிரீத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.


சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  குறிப்பாக கூடுதல் மெட்ரோ ரயில்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்புப் பேருந்துகள், தற்காலிக மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு செய்திருந்தது.




விமான கண்காட்சியில், சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை நடத்தியது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்டையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். கூட்டம் அதிகமாக வரும் என்பதால், பல்வேறு முன் ஏற்பாடுகளும் அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த விமான சாகச நிகழ்ச்சியினை காண கிட்டதட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான  மக்கள் நேற்று முன்தினம் மெரினாவில் திரண்டிருந்தனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகளும், மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தனர். அதிக அளவில் மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சியாக இது லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.


இந்நிலையில், விமானப்படையின் தலைமைத் தளபதி அமர்பிரீத் சிங் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது. இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து பணிகளும் இனி வெற்றிகரமாக பணியாற்றி காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்