கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. பிப். 8ம் தேதி ஆர்ப்பாட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Feb 06, 2025,06:47 PM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்ரவரி 8ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமலேயே இருந்துள்ளார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாணவி கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உட்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னச்சாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 




இந்நிலையில், இந்த கொடூரச் சம்வபம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின்  ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையை கண்டித்தும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.


திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவள் நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது.


திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பல்வேறு குற்றச் செயல்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்துவதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவது மிக மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்த்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


அரசு பள்ளி மாணவிக்கு தான் கல்வி பயிலும் பள்ளியிலே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கின்ற செயல், ஸ்டாலின் மாடல் திமுக அரசு இந்த கொடூரமான செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு, ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலை குனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்