விக்கிரவாண்டியில் திமுகவுக்கு நெருக்கடி.. அதிமுக போட்ட புறக்கணிப்பு பிளான்.. பாமகவுக்கு சாதகம்!

Su.tha Arivalagan
Jun 15, 2024,05:12 PM IST

சென்னை: அதிமுகவின் விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்குப் பின்னால் நாம் ஏற்கனவே  சொன்னபடி ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக கருதப்படுகிறது.


லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வாங்கிய ஓட்டுக்களைச் சேர்த்தால் பல தொகுதிகளில் திமுக கூட்டணி வாங்கிய வாக்குகளை விட அதிகம் இருந்தது. இதனால் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் திமுகவை வீழ்த்தியிருக்கலாம் என்று அதிமுக தலைவர்கள் பேசி வந்தனர்.  இதை வைத்துத்தான் அதிமுக - பாஜக இடையே பெரும் சண்டை கூட வந்தது. டாக்டர் தமிழிசையும் கூட சேர்ந்திருந்தால் பெரிய வெற்றி கிடைத்திருக்கும், நாங்கள் எல்லாம் தோற்கும் தலைவர்களே கிடையாது என்று தெரிவித்திருந்தார்.


இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் மீண்டும் அணி சேர அதிமுக - பாஜக முடிவு செய்யலாம் என்று நாம் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் அண்ணாமலை மட்டுமே அதிமுகவின் மேல் மட்டத் தலைவர்களுக்கு உறுத்தலாக உள்ள விஷயம் என்பதால் அதுதொடர்பான திருத்த நடவடிக்கைகளை பாஜக தரப்பும் எடுக்கலாம். அப்படி எடுத்தால் இரு கட்சிகளும் மீண்டும் கை கோர்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நாம் எழுதியிருந்தோம். எனவே வருகிற 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் நெருக்கடியாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் நமது செய்தியில் எழுதியிருந்தோம்.


அது மட்டுமல் அல்லாமல் இந்தத் தேர்தலில் பாமக போட்டியிட வாய்ப்புகள் அதிகம். அப்படி போட்டியிட்டால் அதிமுகவிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அது ஆதரவைப் பெற முயற்சிக்கும் என்றும் ஒரு செய்தி போட்டிருந்தோம். கிட்டத்தட்ட இப்போது அது உண்மையாகியுள்ளது.




தற்போது கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. ஆனால் நேரடியாக கூட்டணி அமைக்காமல் மறைமுகமாக பாஜக கூட்டணிக்கு உதவி செய்யும் முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.


பாமகவுக்கு ஆதரவான முடிவை எடுத்த அதிமுக


அதிமுக தேர்தலை புறக்கணிப்பதால் தற்போது போட்டி திமுக - பாமக - நாம் தமிழர் என்று சுருங்கியுள்ளது. உண்மையில் சொல்லப் போனால் இப்போது போட்டி திமுக - பாமக இடையேதான். இந்த இடத்தில்தான் அதிமுக முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவினரின் வாக்குகள் பாமக பக்கம் போக வாய்ப்புள்ளது. அதேபோல தேமுதிகவின் வாக்குகளும் கூட பாமக பக்கம் போகலாம் . மொத்தமாக போகாவிட்டாலும் கூட கணிசமான வாக்குகள் பாமக பக்கம் போக வாய்ப்புள்ளது. இது திமுகவுக்கு நெருக்கடியைத் தர அதிமுக போட்ட பிளானாக பார்க்கப்படுகிறது.


அதாவது முறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. ஒரு வேளை, இந்த இடைத் தேர்தலில் அதிமுக தேமுதிக வாக்குகள் பாமகவுக்குப் போய் பாமக வெற்றி பெற்றால் அல்லது கணிசமான தாக்கத்தை திமுகவுக்குக் கொடுத்தால் எதிர்காலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைக்கும் முடிவுக்கு அதிமுக பாஜக போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாக விக்கிரவாண்டியை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


அதிமுகவின் இந்த முடிவை  மற்றவர்களை விட திமுகதான் சீரியஸாக எடுத்துக் கொள்ளும். தனது உத்திகளை மேலும் வலுவாக்க திமுக திட்டமிடும்,வாக்குகள் சிதறிப் போய் விடாமல் ஒருங்கிணைத்து சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இப்போது திமுகவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பால் அதிருப்திக்குள்ளான அதிமுகவினரை வளைக்கவும் திமுக முயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிகவினரின் வாக்குகளும் இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளது. அவர்களின் வாக்குகளுக்கும் திமுக குறி வைக்கும்.


ஆக மொத்தம் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சுவாரஸ்யமான  கட்டத்தை எட்டியுள்ளது.