கள்ளக்குறிச்சி சம்பவம்.. 3வது நாளாக அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் தொடர் ஆர்ப்பாட்டம்.. சஸ்பெண்ட்!

Manjula Devi
Jun 26, 2024,06:01 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சட்டசபையில், அவை அலுவல்களை நடத்த விடாமல் அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்ட நிலையில் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 3வது நாளாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்திற்கு வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதத்தை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரம் தருகிறேன், அதன் பிறகு விவாதிக்கலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்காமல் அதிமுக உறுப்பினர்கள் அவை அலுவல்களை நடத்த விடாமல் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 




இதையடுத்து அவை முனைவர் துரைமுருகன் அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.


சபாநாயகர் அப்பாவு கருத்து: 


அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், சட்டசபையில் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறியும் அதை ஏற்காமல் வெளியே சென்று பேசுவது அவை மாண்புக்கு ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எஞ்சிய நாட்களில் நடைபெறும் இந்த கூட்ட தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என  உத்தரவிட்டார். 


முதல்வர் மு.க ஸ்டாலின்


இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வெளியே சென்று  எதிர்க்கட்சி தலைவர் பேசியது அவை மாண்புக்கு நல்லதல்ல. எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. வீண் விளம்பரங்களை தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர். இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.