"உண்மை பேசுங்க அண்ணாமலை".. அதிமுகவுக்குத் தாவிய பாஜக ஐடி விங் நிர்வாகி பாய்ச்சல்
Mar 11, 2023,09:44 AM IST
சென்னை: பர்கூர் இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று கூறியுள்ளார் சமீபத்தில் பாஜகவிலிருந்து அதிமுகவுக்குப் போன முன்னாள் ஐடி விங் நிர்வாகி திலீப் கண்ணன்.
அதிமுக - பாஜக இடையே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உரசல் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெரியஅளவிலான தலைவர்கள் பாஜகவிடம் அடங்கிப் போவது போலதெரிந்தாலும், சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஐடி விங் நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த ஒரு பேட்டியின்போது ஜெயலலிதாவே டெபாசிட் இழந்தவர்தான் என்று கூறியிருந்தார். அதேபோல ஜெயலலிதாவை விட எனது தாயார் 100 மடங்கு பவர்புல், எனது மனைவி 1000 மடங்கு பவர்புல் என்று கூறியிருந்தார். இதுவும் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அதிமுக தலைவர்கள் தரப்பில் இதற்கு பெரிய அளவில் ரியாக்ஷன் ஏதும் இல்லை. செல்லூர் ராஜுதான், நாவடக்கம் தேவை என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இடைக்காலப் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பாஜக ஐடி விங் செயலாளராக இருந்து அதிமுகவில் இணைந்த திலீப் கண்ணன், அண்ணாமலை பேச்சுக்கு புள்ளிவிவரத்துடன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், 1996ல் பர்கூர் தேர்தலில் திமுக சுகவனம் -59148. அம்மா -50782 திமுக 50.7%. அதிமுக 43.5%. வித்தியாசம் 8366.
பிறகு எப்படி டெப்பாசிட் இழந்ததாக அண்ணாமலை சொல்கிறார்கள். கொஞ்சமாவது உண்மை பேசுங்க அண்ணாலை.. என்று கூறியுள்ளார் திலீப் கண்ணன்.
தனது அரசியல் வாழ்க்கையில், ஜெயலலிதா தோல்வியுற்றது என்றால் இந்த ஒரு தேர்தலில் மட்டும்தான். இத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகவனம் அப்போது இளைஞர், புதுமுகம். யாரும் எதிர்பாராத வகையில் அத்தேர்தலில் ஜெயலலிதா தோல்வியுற்றார். இருப்பினும் அவர் டெபாசிட் இழக்கவில்லை என்பதே உண்மை.