பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?.. 6ம் தேதி மதுரையில் சந்திப்பு என தகவல்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 6ம் தேதி மதுரைக்கு வருகிறார். பாம்பன் புதிய ரயில் பாலத் தொடக்க விழாவுக்காக பிரதமர் மதுரை வருகிறார். அங்கிருந்து அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்கிறார். மதுரை வரும் பிரதமரை சந்திக்க முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி டைம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோருடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக அமித்ஷாவே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முரண்டு பிடிக்கப்பட்டால் அவரை வழிக்குக் கொண்டு வர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனையும் பாஜக வளைத்துப் போட்டு அவரையும் கொம்பு சீவி விட்டு வருவதாக இன்னொரு தகவலும் உள்ளது. அதை வலுப்படுத்துவது போல செங்கோட்டையனும் டெல்லிக்குப் போய் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசி விட்டுத் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 6ம் தேதி விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து அவர் புதிய பாம்பன் ரயில் பாலத் திறப்பு விழாவுக்குச் செல்லவுள்ளார். மதுரை வரும் பிரதமர் மோடியை வழக்கம் போல பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விமான நிலையத்தில் சந்திக்கவுள்ளனர். இந்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியும் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. அனுமதி கிடைத்தால் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் அவரும் இடம் பெறலாம் என்று தெரிகிறது.