ஈரோடு கிழக்கு.. இதுக்குப் பதில் சொல்லுங்க.. பாயின்ட் பாயின்ட்டாக கேள்வி கேட்கும் அதிமுக!

Baluchamy
Jan 31, 2023,01:04 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவின் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகின்ற பிப். 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சி, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.  அதிமுக சார்பில் இரு அணிகளும் போட்டியிடும் என்று தெரிகிறது. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை.

ஆளும் திமுக-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், அமமுக சார்பில் சிவபிரசாந்த் மற்றும் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா அறிவித்துள்ளார். இப்படியாக வேட்பாளரை அறிவித்த கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். 

அந்தவகையில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு பல பல வியூகங்களை அதிமுகவின் ஈபிஎஸ் அணி வகுத்து களம் கண்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக திமுக அரசுக்கு சரமாரியாக கேள்விகள் கேட்டு அதை தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறது. இந்த கேள்விப் பட்டியலை அதிமுக ஈரோடு ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

அதிமுக கேட்டுள்ள கேள்விகள்:

நீட் ரத்து ஏன் செய்யலை?
பெண்களுக்கு மாதம் 1000 ரூ. எங்கே?
கல்வி கடன் தள்ளுபடி எப்போ?
மாதந்தோறும் மின் கட்டணம் என்று எப்போ மாற்றப்படும்?
சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் எங்கே?
சொத்து வாரி ஏற்ற மாட்டோம், மின்சார கட்டணம் ஏற்ற மாட்டோம் என்று சொல்லிவிட்டு ஏன் இந்த ஏற்றம்?
தாலிக்கு தங்கம் திட்டம் எங்கே?
மாணவர்களுக்கு மடிக்கணினி எங்கே? 
அதிமுக அரசை விட அதிகம் கடன் வாங்கிட்டு அனைத்துத் திட்டங்களையும் கைவிடுவது ஏன்?
அம்மா உணவகம் ஒழுங்கா நடத்தலையா?
நீங்க சொன்ன மாதிரி பொங்கலுக்கு ரூ. 5000 எங்கே?
கஞ்சாவை ஏன் கட்டுப்படுத்த முடியலை?
சிமென்ட், கம்பி விலை ஏன் இரு மடங்கு உயர்த்துனீர்கள்?
பொங்கல் மற்றும் பிற டெண்டர்களுக்கு எதுக்கு வட மாநில நிறுவனங்கள்?
கேரள கழிவுகளை ஏன் தமிழ்நாட்டில் கொட்ட அனுமதி?
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம்?
முதியோர் உதவித் தொகை ஏன் உயர்த்தவில்லை?
நகைக் கடன் தள்ளுபடி?
அம்மா மினி கிளினிக் ஏன் நிறுத்தம்? ஆகிய கேள்விகளை அதிமுக கேட்டுள்ளது.

அதிமுகவில் யாருக்கு இரட்டை இலை சின்னம் என்ற குளறுபடி ஒருபுறம் இருந்தாலும் ஈபிஎஸ் அணி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.