அதிமுகவை விமர்சித்து பேசி.. தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் அண்ணாமலை.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Jul 05, 2024,10:27 PM IST

கோயம்பத்தூர்:  தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறித்து விமர்சித்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் மெத்தப் படித்தவர். அரசியல் ஞானி. அப்படித்தான் பேசுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவினரும், அதேபோல தேர்தலை புறக்கணித்துள்ள இன்னொரு கட்சியான தேமுதிகவினரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாமக அழைப்பு விடுத்துள்ளது. ஜெயலலிதா படத்தையும் பாமக தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகிறது. மறுபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் அதிமுகவை விமர்சித்து வருகிறார்.


இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது விளக்கம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அண்ணாமலையின் விமர்சனம் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார். அவரது பேட்டியிலிருந்து:




தொடர்ந்து அதிமுகவை விமர்சிக்கிறார்: தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அதிமுக விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்கமாக தெரிவித்து விட்டோம். இருப்பிம் வேண்டும் என்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசி வருகிறார். இந்தத் தேரத்லில் அதிமுக போட்டியிட்டிருந்தால், 3வது இடம், 4வது இடம்தான் கிடைத்திருக்கும் என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்.


அரசியல் ஞானி அண்ணாமலை: அவர் மெத்தப் படித்தவர். மிகப் பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் விக்கிரவாண்டி தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர்  6800 வாக்குகளே குறைவாக பெற்றிருந்தார். 2வது இடத்தில் அதிமுக இருந்தது. அது நாடாளுமன்றத் தேர்தல். ஆனால் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்  நாங்கள் போட்டியிடாமல் புறக்கணிப்பதற்கு பல்வேறு காரணங்களை நாங்கள் சொல்லியுள்ளோம். 


எப்படி நடந்தது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வந்தது. அப்போது எப்படி திமுக நடந்து கொண்டது என்பதை நாடே அறியும். வாக்காளர் பெருமக்களை ஆடு மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து பணம் கொடுத்து பரிசுப் பொருட்கள் கொடுத்துதான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. அது அண்ணாமலைக்கும் தெரியும். அவரும் கூட்டணியில் இருந்தார். பிரச்சாரமும் செய்தார். அப்படி இருக்கும்போது, வேண்டும் என்றே திட்டமிட்டு விக்கிரவாண்டி பற்றி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்ல. ஏதோ அவர்தான் பாஜக பலம் பெற்றிருப்பதாக மாயத் தோரற்றத்தை உருவாக்கி்க கொண்டிருக்கிறார். உண்மை அது அல்ல. 


எங்கே வளர்ந்திருக்கிறது பாஜக: 2014ல் பல்வேறு கட்சிகளை இணைத்து பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024ல் அதேபோல கூட்டணி அமைத்தனர்.  2014ல் பாமக, பாஜக புதிய நீதிக் கட்சி தேமுதிக மதிமுக என பல கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்டார்கள். கோவையில்  சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளரை விட 40,000 வாக்குகள்தான் குறைவாக பெற்றார். இப்போது நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான அண்ணாமலை போட்டயிட்டார். திமுகவை விட 1, 18,000 குறைவாக பெற்று தோற்றார். அப்படியென்றால் எங்கே பாஜக வளர்ந்திருக்கிறது.  


வாயிலேயே வடை சுடுகிறார்: பேசிப் பேசிய தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவர் மாநிலத் தலைவராக வந்த பிறகு  மத்திய அரசிடம் பேசி, என்ன புதிய திட்டத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார். எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளை அவதூறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். 


பொய்யான வாக்குறுதிகள்: கோவை தேர்தலில் 100 வாக்குறுதிகள், 500 நாளில் நிறைவேற்றம் என்றார். எந்தக் கட்சித் தலைவரும் இப்படிப்பட்ட வாக்குறுதியை கொடுத்தே கிடையாது. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லித்தான் வாக்குகளைப் பெற்றார். உண்மை பேசி பெறவில்லை.  கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  இப்படிப்ட்ட தலைவர் இருப்பதால்தான் இதற்கு முன்பு 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியமைத்து வந்த பாஜக இப்போது தேர்தலில் சறுக்கி, கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது.


ஓபிஎஸ்ஸுக்கு இடமில்லை: ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்டது எனது முடிவு அல்ல. வேலுமணி முடிவு அல்ல. கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அவரை நீக்கினோம். அவரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. அதேபோல ஏற்கனவே அரசியலை விட்டுப் போவதாக அறிவித்து விட்டார் சசிகலா. ஆனால் இப்போது மீண்டும் கட்சியைச் சேர்ப்போம் என்கிறார். இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா. கட்சிங்க. எம்ஜிஆர் மறைந்த பின்னர் ஜானகி அம்மா எப்படி நடந்து கொண்டாரோ அதேபோல நடந்து கொள்ளப் பார்க்கிறார் சசிகலா என்றார் எடப்பாடி பழனிச்சாமி.